பல்கலைக்கழகங்களை தொடக்கப் பள்ளிகளைப் போல நினைக்கக்கூடாது: யுஜிசி செயலாளருக்கு ராமதாஸ் கடிதம்


சென்னை: பல்கலைக்கழக மானியக்குழுவின் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான குறைந்த பட்சத் தகுதிகள் மற்றும் உயர்கல்வியின் தரத்தைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் போன்ற விதிமுறைகள் வரைவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர், பேராசிரியர் மனீஷ் ஆர்.ஜோஷிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில், ”பல்கலைக் கழக மானியக் குழு (பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான குறைந்த பட்சத் தகுதிகள் மற்றும் உயர்கல்வியின் தரத்தைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள்) விதிமுறைகள் 2025-க்கான வரைவு குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். பல்கலைக்கழக மானியக்குழுவின் வரைவு விதிமுறைகள் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை தேர்வு செய்து நியமிப்பதில் மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரங்களை முற்றிலுமாக பறிக்கும் வகையில் உள்ளன.

விதிகளை பின்பற்றாத பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும், பட்டம் வழங்கும் உரிமை பறிக்கப்படும், மானியக்குழுவின் திட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்படும், திறந்த நிலை மற்றும் தொலைத்தொடர்பு முறையிலும், ஆன்லைன் வாயிலாகவும் பட்டப் படிப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய விதிகள் சர்வாதிகாரத் தன்மை கொண்டவை என்பதாலும், மாநில பல்கலைக் கழகங்களின் தன்னாட்சி அதிகாரத்தை குறைக்கும் வகையில் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு இல்லாத அதிகாரங்களையெல்லாம் வழங்கும் தன்மை கொண்டவை என்பதாலும் அவை கடுமையாக கண்டிக்கத்தக்கவை ஆகும்.

பல்கலைக்கழக மானியக்குழு (பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான குறைந்த பட்சத் தகுதிகள் மற்றும் உயர்கல்வியின் தரத்தைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள்) விதிமுறைகள் 2025-க்கான வரைவு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அதன்மீது உயர்கல்வித் துறையினரும், பொதுமக்களும் ஒரு மாதத்தில் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும், அந்தக் கருத்துகளை ஆய்வு செய்து வரைவு விதிகளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மானியக்குழு அறிவித்திருக்கிறது.

பல்கலைக்கழக மானியக்குழுவின் இந்த வரைவு விதிகளில் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் நியமனத்திற்கான குறைந்தபட்ச தகுதிகள், அனுபவம், சாதனைகள், தேர்வுக்குழு, தேர்வு முறை ஆகியவை குறித்தும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வரைவு விதிகள் நியாயமற்றவை. இவை ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிகளை மீறும் தன்மை கொண்டவை என்பது மட்டுமின்றி, பல்கலைக் கழக மானியக் குழுவுன் அதிகார வரம்பை மீறும் வகையிலும் உள்ளன. துணை வேந்தர்கள் நியமனத்திற்கான தேர்வுக் குழுவை இனி பல்கலைக் கழக வேந்தர்களான ஆளுனர்கள் தான் நியமிப்பார்கள்; தேர்வுக் குழுவில் ஆளுனரின் பிரதிநிதி, மானியக் குழுவின் பிரதிநிதி, பல்கலைக் கழக ஆட்சிக் குழுவின் பிரதிநிதி ஆகிய மூவர் இடம் பெறுவர்.

பல்கலைக்கழக துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்கான குழுவில் இப்போது இருக்கும் மாநில அரசின் பிரதிநிதிக்கு மாற்றாக, பல்கலைக் கழக மானியக் குழுவின் பிரதிநிதியை திணிக்க வரைவு விதிகள் வகை செய்வதால், இது பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுகளுக்கு இருக்கும் அதிகாரம், உரிமை, பங்கு ஆகியவற்றை பறிக்கும் தன்மை கொண்டது ஆகும். கல்வியாளர்கள் மட்டுமின்றி, பொது நிர்வாகத் துறையில் அனுபவம் பெற்றவர்களும் துணைவேந்தர்களாக நியமிக்கப்படலாம் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளில் கூறப்பட்டுள்ளது.

துணைவேந்தர் நியமன விதிகளை விட, பேராசிரியர்கள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனத்தில் மானியக் குழு வகுத்துள்ள விதிகளை பின்பற்ற மறுக்கும் கல்வி நிறுவனங்களுக்கான தண்டனைகள் தான் மிகக் கொடியவை. விதிகளை பின்பற்றாத பல்கலைக் கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும், பட்டம் வழங்கும் உரிமை பறிக்கப்படும், மானியக்குழுவின் திட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்படும், திறந்த நிலை மற்றும் தொலைத்தொடர்பு முறையிலும், ஆன்லைன் வாயிலாகவும் பட்டப்படிப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களை எச்சரிக்கும் வகையிலும், தண்டிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ள இந்த வரைவு விதிகள் ஜனநாயகத்தின் அடிப்படையை மீறக்கூடிய அப்பட்டமான அதிகார அத்துமீறல் ஆகும்.

துணைவேந்தர்கள் நியமனத்தைப் பொறுத்தவரை பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி முக்கியம் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தனித் தனி சட்டங்களின் அடிப்படையில அமைக்கப்பட்டவை. அந்த சட்டங்களில் கூறப்பட்டிருப்பதைப் போன்று தான் துணைவேந்தர் தேர்வுக் குழுவை அமைக்க முடியும். அதில் தலையிட பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு எந்த உரிமையும் கிடையாது.

பல்கலைக்கழக மானியக் குழு என்பது பல்கலைக்கழக கல்வியை மேம்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் நாடாளுமன்ற சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட சட்டப்பூர்வமான ஓர் ஒழுங்கு முறை அமைப்பு மட்டும் தான். பல்கலைக்கழகங்களின் கட்டமைப்புகள் மற்றும் மனிதவளம் தொடர்பான தேவைகளையும், தகுதிகளையும் நிர்ணயிப்பதற்கு மானியக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், ஒரு துணை வேந்தர் இப்படித் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கட்டாயப் படுத்த மானியக் குழுவுக்கு எந்த அதிகாரமும், உரிமையும் கிடையாது.

இதை உணர்ந்திருக்கும் போதிலும், இது போன்ற நடைமுறைக்கு ஒவ்வாத கட்டுப்பாடுகளை விதிப்பது மாநில அரசின் அதிகாரத்திலும், பல்கலைக் கழகத்தின் தன்னாட்சியிலும் தலையிடும் செயலாகும். துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரின் நியமனம் குறித்த விதிகளை கடைபிடிக்காவிட்டால், பல்கலைக்கழகத்தின் பட்டம் வழங்கும் அதிகாரத்தைப் பறிப்போம் என்பது அப்பட்டமான மிரட்டல் ஆகும். அதற்கான அதிகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு எங்கிருந்து பெற்றது என்பது தெரியவில்லை.

துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் நியமனம் குறித்த விதிகளை உருவாக்கும் போது, அதற்காக கல்வியாளர்களைக் கொண்ட குழுவை அமைத்து, அவர்களின் பரிந்துரைப்படி தான் மானியக்குழு செயல்பட முடியும். மாறாக, பல்கலைக்கழக மானியக் குழு தன்னிச்சையாக விதிகளை வகுத்து மக்களிடம் கருத்து கேட்க முடியாது.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மாநில அரசின் நிதி மற்றும் நிலத்தில் உருவாக்கப்பட்டவை. பல பல்கலைக்கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. அவற்றுக்கு தீர்வு காண பல்கலைக்கழக மானியக் குழு எந்த வகையிலும் உதவுவதில்லை. மாறாக, மாநில அரசுகள் தான் தேவைப்படும் நிதியில் சிறிதளவையாவது வழங்கி உதவுகின்றன. பல்கலைக்கழகங்களுக்கு மானியக் குழு வழங்கும் நிதி கடந்த சில ஆண்டுகளில் மிகக் கடுமையாக குறைக்கப்பட்டு விட்டது. பல்கலைக் கழகங்களின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பங்களிக்காத மானியக் குழு, அவற்றின் அன்றாட செயல்பாடுகளில் தலையிடுவதற்கு எந்த உரிமையும் இல்லை. மானியக்குழு அதன் அத்துமீறலை கைவிட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளும், ஆராய்ச்சிப் பணிகளும் கவலையளிக்கும் வகையில் தான் உள்ளன என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை ஆகும். பல்கலைக்கழகங்களின் தரத்தையும், ஆராய்ச்சித் திறனையும் அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியக்குழு ஆலோசனைகளை வழங்கலாம். அவை ஏற்கத்தக்கவையாக இருந்தால் அவற்றை பல்கலைக்கழகங்களும் செயல்படுத்தலாம். அதை விடுத்து பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் தொடக்கப் பள்ளிக்கூடங்களைக் போல நினைத்துக் கொண்டு, அவற்றின் அன்றாட செயல்பாடுகளில் தலையிடுவதற்கு பல்கலைக்கழக மானியக் குழு முயல்வது நல்லதல்ல.

எனவே, மாநில அரசு மற்றும் பல்கலைக் கழகங்களின் தன்னாட்சியை மதித்து பல்கலைக்கழக மானியக்குழு (பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான குறைந்த பட்சத் தகுதிகள் மற்றும் உயர்கல்வியின் தரத்தைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள்) விதிமுறைகள் 2025-க்கான வரைவை மானியக்குழு திரும்பப்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

x