சிவகாசி: சிவகாசியில் பொங்கல் வியாபாரத்திற்காக கரும்பு கட்டுகள் அடுக்கி வைத்ததில் அரசு பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது.
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல்லில் ஒரே வளாகத்தில் எஸ்ஆர்என் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி ஆகியவை இயங்கி வருகிறது. இங்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் (2017 - 2018) இருந்து சிவகாசி - விருதுநகர் சாலையில் சுற்றுச் சுவருடன் நுழைவு வாயில் அமைக்கப்பட்டது.
பள்ளி நுழைவு வாயில் அருகே சுற்றுச் சுவற்றில் பொங்கல் பண்டிகைக்காக கரும்பு கட்டுகள் நேற்று இரவு சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் கரும்பு கட்டுகளின் பாரம் தாங்காமல் அரசு பள்ளி சுற்றுச் சுவர் சுமார் 20 அடி நீளத்திற்கு இடிந்து விழுந்துள்ளது. பள்ளியில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.