காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்தித்து பேச அனுமதி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர், எஸ்பி அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த பரந்தூரில் சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் அமைக்க 13 கிராமங்களில் 5,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து 900 நாட்களை கடந்தும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு வேறு எந்தப் போராட்டத்தையும் தவெக மேற்கொள்ளவில்லை என அப்பகுதி கிராம மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, ‘இந்து தமிழ் திசை’ ஆன்லைன் பக்கத்தில் கடந்த ஜன.2-ம் தேதி செய்தி வெளியானது. இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குழுவினரை, வரும் ஜன.19 அல்லது 20-ம்தேதியில் ஏதேனும் ஒரு நாளில் தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்துப் பேசஅனுமதி, போலீஸ் பாதுகாப்புக் கோரி தவெக மாநில பொருளாளர் வெங்கட்ராமன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள், காஞ்சிபுரம் ஆட்சியர், எஸ்பிஅலுவலகத்தில் நேற்று முன்தினம் மனு வழங்கினர்.