அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தங்களை செய்து பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை மத்திய அரசு அகற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தாலும், அதை செயல்படுத்துவது மத்திய அரசின் விருப்பம் என்றும், அதில் தலையிட விரும்பவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த நிலைப்பாடு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பொருந்தும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களில் ஒரு தரப்பினரை இடஒதுக்கீட்டிலிருந்து வெளியேற்றவே கிரீமிலேயர் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் மத்திய அரசுப் பணிகளில் ஓபிசி இடஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டு 35 ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரதிநிதித்துவம் இன்னும் 20 சதவீதம் கூட தாண்டவில்லை.
கிரீமிலேயர் முறை உண்மையாகவே பயனளித்து இருந்தால், ஓபிசிகளுக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டில், மொத்தமுள்ள 2,633 சாதிகளில் 983 சாதிகளுக்கு எந்த பயனும் கிடைக்காத நிலையும், மேலும் 994 சாதிகளுக்கு 2.66 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும் நிலையும் ஏற்பட்டிருக்காது. அதனால், தான் பிற்படுத்தப்பட்டவர்களிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் சமூகநீதி வழங்குவதற்கு சிறந்தத் தீர்வு உள்இடஒதுக்கீடு தானேதவிர கிரீமிலேயர் முறை இல்லை.
எந்த வகையில் பார்த்தாலும் கிரீமிலேயர் முறை அகற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். எனவே, அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தங்களை செய்து பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை உடனடியாக அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.