திருச்சி: துணைவேந்தர் நியமனத்தில் யுஜிசி வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் சங்கம் (ஆக்டா) வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் சங்கம் (ஆக்டா) பொதுச்செயலாளர் எஸ்.சகாயசதீஷ் அறிக்கையில் கூறியது: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் செய்வது குறித்து பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) புதிய வரைவு ஒழுங்குமுறை 2025-ஐ கடந்த ஜன.6-ம் தேதி வெளியிட்டார்.
அதன்படி, துணைவேந்தர் கல்வியாளர்களாகவோ, ஆசிரியர்களாகவோ இல்லாமல் சமூகத்தில் வெற்றியடைந்த எவரேனும் இருக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறது. இதைக்கண்டு இந்திய மற்றும் தமிழகத்தைச் சார்ந்த கல்வியாளர்கள், ஆசிரியக்கள், மாணவர்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.
ஒவ்வொரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரின் பணி இன்றியமையாதது. ஏனென்றால் அந்தந்த பல்கலைக்கழகம் மற்றும் அந்தப் பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற நூற்றுக்கணக்கான கல்லூரிகளையும் வழிநடத்துவதில் தொடங்கி, அரசின் எல்லா செயல்திட்டங்களையும் தலைமைப் பொறுப்பிலிருந்து வழிநடத்திடும் பெரும் பொறுப்பு துணை வேந்தருக்குத்தான் உள்ளது.
ஆகையால் இந்த பொறுப்புக்கு கல்வி, நிர்வாகத்திறமை மற்றும் அனுபவம் உள்ளவரைத் தேர்ந்தெடுப்பதே வழக்கமாகும். துணைவேந்தர் பதவி காலியாகும்போது அடுத்த துணைவேந்தரை தேர்ந்தெடுக்க தேடுதல் குழு ஒன்று அமைக்கப்படும். இதில் அனேக பல்கலைக்கழகங்களில் இதுவரை உள்ள நடைமுறை என்னவென்றால் மாநில அரசின் பிரதிநிதி, பல்கலைக்கழக ஆட்சிக் குழுவின் (சிண்டிகேட்) பிரதிதி மற்றும் ஆட்சிமன்றக் குழுவின் (செனட்) பிரதிநிதி உறுப்பினர்களாக இருப்பார்கள்.
இது தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் சிறு வேறுபாடுகள் இருக்கும். ஆனால் தற்போதைய அறிவிப்பு மாநில அரசின் மீது கல்லைப் போடுவது போன்று இருக்கிறது. ஏனென்றால் மாநில அரசின் பிரதிநிதித்துவத்தை முற்றிலுமாக அகற்றி மூவரில் ஒருவர் வேந்தரின் (ஆளுநர்) பிரதிநிதி, ஒருவர் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) பிரதிநிதி மற்றும் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவின் (சிண்டிகேட்) பிரதிநிதி.
இது கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கும் செயலாகும். மாநில அரசின் உரிமையை முற்றிலுமாக பறிப்பதாக உள்ளது. இந்த பிரச்சினையால் தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே எழுந்துள்ள சர்ச்சை தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்ககழகங்களிலும் துணைவேந்தர் பதவிகள் காலியாக இருக்கக்கூடிய சூழலுக்குக் கொண்டு செல்லுமோ என்கிற அச்சத்தை கல்வியாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
தற்போது சென்னை, மதுரை காமராசர், கோவை பாரதியார், சிதம்பரம் அண்ணாமலை, சென்னை அண்ணா, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. மேலும் சில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் வெகுவிரைவில் காலியாக உள்ளன. ஏற்கனவே பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்த அறிவிப்பில் அனைத்து கல்லூரிகளும் மத்திய அரசின் ‘புதிய தேசியக் கல்விக்கொள்கையை’ பின்பற்றவில்லையென்றால் பல்கலைக்கழகத்தோடு உள்ள இணைப்பு துண்டிக்கப்படும்.
ஆதலால் பட்டங்களை அளிப்பதில் சிரமம் ஏற்படுத்தப்படுத்தப்படும் என்ற மிரட்டலால் கலங்கிப் போயிருக்கும் கல்வியாளர்களும், கல்லூரிப் பேராசிரியர்களுக்கும் மேலும் இந்த அறிவிப்பு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்றது ஆகும்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை இந்திய தேசத்தின் கல்விச்சூழலை நாசமாக்கும். வேண்டுமென்றே ஏதோ ஒரு குறுகிய மனப்பாங்கோடு தான் இந்த செயல்களை எல்லாம் இந்த மத்திய அரசு செய்து கொண்டு இருக்கிறது. நம் தமிழ்நாடு அகில இந்திய அளவில் உயர் கல்வியில் தலைதூக்கி நிற்கும் இந்தத் தருணத்தில் அதைச் சீர்குலைக்கும் முயற்சியாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது.
மத்திய அரசு உடனே இந்த முடிவினை திரும்பப் பெற வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழு முறையான, நெறியான, மற்றுமொரு புதிய வரைவு அறிக்கையை வெளியிட வேண்டும். தவறினால் ஆக்டா மற்ற சங்கங்களுடன் இணைந்து தீவிரமான போராட்டங்களில் இறங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.