நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானை உயிரிழப்பு!


திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் யானை காந்திமதி, உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தது.

கடந்த 1985ம் ஆண்டு சங்கரன் பிள்ளை என்பவரால் திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலுக்கு அளிக்கப்பட்ட யானை, ‘காந்திமதி’ என பெயர் சூட்டப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தது. தற்போது 55 வயதாகும் காந்திமதி யானை, அன்று முதல் நெல்லையில் பக்தர்களின் அன்பைப் பெற்று வலம் வந்தது.

முக்கிய திருவிழாக்களில் சுவாமி சப்பரங்களுக்கு முன்பு அலங்கரிக்கப்பட்டு ஒய்யாமாக நடந்து வரும் காந்திமதி யானையின் நடையழகை ரசிப்பதற்காகவே நான்கு மாட வீதிகளிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம் கூடும். சுதந்திர தினம், குடியரசு தினங்களில் தேசியக்கொடிக்கு காந்திமதி யானை சத்தமிட்டு மரியாதை செலுத்துவதை பார்க்கவே அத்தனை பரவசமாகயிருக்கும்.

இந்நிலையில் கடந்த 2020ல் காந்திமதி யானைக்கு பின்னங்கால்களில் மூட்டு பகுதியில் ஏற்பட்ட தசை பாதிப்பு காரணமாக அதனால் அதிக நேரம் நிற்கவோ நடக்கவோ முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்து திருவிழா காலங்களில் யானை காந்திமதி அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக நான்கு ரத வீதிகளில் வலம் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 40 நாட்களாக தசை பாதிப்பு அதிகமான காரணத்தினால் யானை மிகவும் அவதியுற்று வந்த யானை, நேற்று முன் தினம் இரவு நின்று கொண்டே தூங்கிக் கொண்டிருந்த நிலையில், வலி தாங்காமல் அப்படியே சாய்ந்து படுத்து விட்டது. நேற்று காலை யானையை எழுப்பும் முயற்சியில் பாகன் ஈடுபட்டபோது அதனால் எழுந்து நிற்க முடியவில்லை. இது குறித்து உடனடியாக எனவே கோவில் நிர்வாகத்தினர் மருத்துவக் குழுவினருக்கு தகவல் அளித்தனர்.

தலைமை மருத்துவர் டாக்டர் முருகன், மருத்துவக் கல்லூரி மருத்துவர் டாக்டர் மனோகரன், மதுரை பன்னோக்கு கால்நடை மருத்துவர் டாக்டர் கலைவாணன், மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர் மாதேஷ், டாக்டர் செல்வ மாரியப்பன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் யானை காந்திமதியை நேரில் வந்து ஆய்வு செய்து, யானையின் ரத்த மாதிரிகளை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பரிசோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கிரேன் உதவியுடன் யானை தூக்கி நிறுத்தப்பட்ட நிலையில் சிறிது நேரம் நின்றுக் கொண்டிருந்த யானை மீண்டும் நிற்க முடியாமல் படுத்து விட்டது. தொடர்ந்து மருத்துவ குழுவினர் யானையை எழுந்து நிற்க வைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், யானை காந்திமதி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தது.

x