திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. மக்கள் கூடும் இடங்கள், சாலைகளிலும் அதிக அளவில் நாய்கள் சுற்றி வரும் நிலையில் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவிலிருந்து நேற்று மாலைக்குள் 15-க்கும் மேற்பட்டோர் நாய் கடியால் பாதிக்கப்பட்டனர்.
ராமலிங்கம் தெருவைச் சேர்ந்த பூ வியாபாரி நாகராஜ் (52) என்பவரை நாய் காலில் கடித்து விட்டதால் ரத்தம் பீறிட்டு வெளியேறியது. ஆத்திரமடைந்த அவர் நாய் கடியுடன் மணப்பாறை நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். அலுவலக நுழைவாயிலில் படுத்துக் கொண்டு தெருநாய்களை கட்டுப்படுத்தக் கோரி போராட்டாம் நடத்தினார்.
இதுகுறித்து நாகராஜ் கூறுகையில், ‘மணப்பாறை நகருக்குள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் தான் பாதிப்புக்கு ஆளாகி உள்ளேன்’ என்றார்.
நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு எழுந்து சென்றார்.
கடந்த மாதம் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு சுமார் 270-க்கும் மேற்பட்டோர் பேர் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர். இந்த பாதிப்பு என்பது மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றனர்கள் மட்டும் தான். இதுமட்டுமின்றி நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அருகில் உள்ள பல்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றுச் சென்று கொண்டு தான் இருக்கின்றனர். எனவே இப்பிரச்சினைக்கு நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.