பெரியார் பற்றி சீமான் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது: எடப்பாடி பழனிசாமி ஆதங்கம்


சென்னை: பெரியார் பற்றி சீமான் பேசியது வருத்தத்துக்குரியது. பெரியார் வாழ்ந்த காலத்தில் பாமர மக்களுக்கு அவரால் ஏற்பட்ட நன்மைகள் ஏராளம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சில கருத்துகள் தமிழகத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. சீமான் பேச்சுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு, பல காவல் நிலையங்களில் 70க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த சூழலில் சீமான் கருத்து குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "பெரியார் பற்றி சீமான் பேசியது வருத்தத்துக்குரியது. இறந்த பெருந்தலைவரைப் பற்றி அவதூறாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெரியார் வாழ்ந்த காலத்தில் பாமர மக்களுக்கு அவரால் ஏற்பட்ட நன்மைகள் ஏராளம்.

அந்த காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மக்கள் பெரியாரால் ஏற்றம் பெற்றார்கள். அதையெல்லாம் மறக்கக் கூடாது. யாராக இருந்தாலும், அதுபோன்ற தலைவரை அவதூறாகப் பேசுவது விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.

x