சென்னை: நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் வழங்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் அக்கட்சிக்கு சின்னம் கிடைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்றதால், நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம், அனுப்பியுள்ள கடிதத்தில், ‘தேர்தல் சின்னங்கள் சட்டம் 1968, பிரிவு 6ஏ-ன் விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளை கடந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பூர்த்தி செய்திருக்கிறது. எனவே தமிழகத்தின் மாநில கட்சியாக அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
அக்கட்சி தனக்கு 'நிலத்தை உழும் விவசாயி’ அல்லது
‘புலி’ சின்னம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் இந்த சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருப்பதால் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க முடியாது. எனவே தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ள இலவச சின்னங்களில் மூன்றினை தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் தமிழர் கட்சி மீண்டும் 3 புதிய சின்னங்களை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும். அதில் ஒரு சின்னம் அக்கட்சிக்கு வழங்கப்படும்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் சின்னம் பெறும் முயற்சியில் நாதக இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.