திமுக அரசுக்கு எதிராக அதிமுக மகளிரணியினர் சென்னையில் போராட்டம்!


சென்னை: பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்களை கட்டுப்படுத்தத் தவறிய திமுக ஆட்சியைக் கண்டித்து இன்று அதிமுக மகளிரணி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்தும்; பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய; சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்தும்;

மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை மூடி மறைக்கும் விதமாக, கழகத்தின் மீது பொய்யான அவதூறு செய்திகளைப் பரப்பி திசை திருப்பும் வகையில் `பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக’ என அநாகரிகமான, அருவருக்கத்தக்க, அப்பட்டமான ஒரு பச்சைப் பொய்யை கூறியுள்ள திமுக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரை கண்டித்தும்,

ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியரின் ஆபாச வீடியோவைக் காட்டி, மிரட்டி பணம் கேட்ட சம்பவத்தில், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக சுற்றுச் சூழல் அணிச் செயலாளர் மீது, வழக்கு பதிவு செய்யாமல் பாதுகாக்கும் திமுக அரசின் சட்டத் துறை அமைச்சர் ரகுபதியை கண்டித்தும்,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுடைய அறிவிப்பிற்கிணங்க, கழக மகளிர் அணியின் சார்பில் சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில், இன்று (11.1.2025 – சனிக் கிழமை) காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மகளிர் தலைமைக் கழகச் செயலாளர்கள், மகளிர் முன்னாள் அமைச்சர்கள், மாநில அளவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வரும் மகளிர் நிர்வாகிகள், கழக மகளிர் அணி மாநில துணை நிர்வாகிகள், மகளிர் செய்தித் தொடர்பாளர்கள், மகளிர் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக மகளிர் அணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பெண்களும் கலந்துகொண்டனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x