சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது உள்ளிட்ட உள்கட்சி விவகாரங்கள் தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வா.புகழேந்தி மனுதாக்கல் செய்துள்ளார்.
அதிமுக உள்கட்சி விவகாரங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளில் தீ்ர்வு காணும்வரை இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்து விசாரித்து தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன்படி தேர்தல் ஆணையம் அனைத்து தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தியது.
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமியை அங்கீகரித்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி, முன்னாள் எம்.பி-க்கள் ரவீந்திரநாத், கே.சி.பழனிசாமி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தனர்.
இதற்கு பதிலளிக்கும்படி அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் இந்த தடையை நீக்கக்கோரி அதிமுக ஒருங்கிணைப்பு குழு சார்பி்ல் பெங்களூரு வா.புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ‘‘டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுகவின் உள்கட்சி பிரச்சினை தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்து விசாரணை நடந்து வரும் சூழலில், பழனிசாமி உண்மைக்குப் புறம்பான தகவல்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்து இடைக்காலத் தடையுத்தரவு பெற்றுள்ளார். எனவே அந்த தடையை நீக்க வேண்டும்’’ எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் புகழேந்தி தரப்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி முறையீடு செய்தார். ஆனால் அதையேற்க மறுத்த நீதிபதிகள், இந்த மனு, ஜன.27 அன்று விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.