மும்பை அடல் சேது பாலம் போல சென்னை கலங்கரைவிளக்கம் முதல் நீலாங்கரை வரை கடலில் மேம்பாலம்: அமைச்சர் தகவல்


சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மும்பை அடல் சேது பாலம் போல கலங்கரை விளக்கம் முதல் - நீலாங்கரை வரையில் கடலில் மேம்பாலம் அமைக்கவும், திருவான்மியூர் முதல் அக்கரை வரை 6 வழி மேம்பாலம் அமைக்கவும் ஆய்வு நடைபெற்று வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, இலங்கை- இந்தியா இடையில் பாலம் அமைக்கப்படுமா, சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க நவிமும்பையில் கட்டப்பட்ட அடல் சேது பாலம்போல, தமிழகத்தில் பட்டினப்பாக்கம் முதல் மகாபலிபுரம் வரையில் கடல் மேல் பாலம் அமைக்கப்பட வேண்டும். அமெரிக்காவில் ஒரே இடத்தில் 37 அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் இங்கும் பணிகள் மேற்கொள்ளப்படுமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர், சுற்றுச்சூழல் பாதிப்பு இவற்றால் பாலத்திட்டம் கனவாகவே இருந்து வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வந்தபோது, தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை சுரங்கப்பாதை அமைக்கலாம் என்ற இந்தியாவின் யோசனையை இலங்கை நிராகரித்ததால் அது கைவிடப்பட்டது.

இந்நிலையில், தனுஷ்கோடியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள தலைமன்னாருக்கு பாலம் கட்டலாமா, கப்பல் விடலாமா என்று ஆய்வு செய்தோம். அதன்பின், 2023-ல் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிடம் சாலை போக்குவரத்து பாலம், பைப்லைன் அமைக்கும் திட்டம் முன்மொழியப்பட்டது. இதுகுறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் கடிதம் எழுதப்படும். கலங்கரை விளக்கம் முதல் நீலாங்கரை வரை 15 கி.மீ. தூரத்துக்கு முதல்கட்டமாக கடல் மேல் பாலம் அமைக்க சாத்தியம் உள்ளதா என்பதை ஆய்வு செய்யும் பணியில் நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டுள்ளது. திட்ட அறிக்கை தயாரித்து எந்த நிதியல் செயல்படுத்துவது என்பது குறித்து முதல்வரிடம் பேசி முடிவெடுக்கப்படும்.

தமிழக சாலை விரிவாக்கத்துக்கு பல கடிதம் எழுதிய நிலையில் மத்திய அரசு நிதி தருவதாக கூறப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் வெளிநாட்டு வல்லுநர்களை அழைத்து பாலப்பணிகளை மேற்கொள்ள முடியும். ஆணையம் மூலம் திருவான்மியூர் முதல் அக்கரை வரை 15 கி.மீ. தொலைவுக்கு 6 வழிச்சாலை பாலம் அமைப்பதற்கான ஆய்வு நடைபெறுகிறது. சென்னை மற்றும் பிற மாநகராட்சி பகுதிகளில் நெரிசல்மிக்க இடங்களையும் ஆய்வு செய்து பாலம் அமைக்கப்படும்.

அதேபோல், மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலையில் இருவழிப்பாதை பகுதி மேம்படுத்தப்படுவதுடன், தேவைப்பட்டால், மாம்பாக்கம் சந்திப்பில் பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x