மதுரை: சீமான் தெரிவித்த கருத்துக்கள் சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கும் வகையில் உள்ளது. இது தொடர்பாக ஜன.20ல் போலீஸார் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவரது கருத்து சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. பெரியார் சமூக நீதிக்காகவும், தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டவர். அவரைப் பற்றி அடிப்படை ஆதாரம் இல்லாமல் பொது வெளியில் அவதூறான கருத்துக்களை சீமான் தெரிவித்துள்ளார்.
இதனால் சீமான் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீஸார் வழக்கு பதிவு செய்யவில்லை. என் புகாரின் பேரில் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய அண்ணாநகர் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, “சீமான் தெரிவித்த கருத்துக்கள் சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கும் வகையில் உள்ளது. எனவே மனுதாரரிடம் புகார் மனுவை பெற்று அண்ணா நகர் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக ஜன.20ல் போலீஸார் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.