சென்னை: ஊழியர்கள் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என எல் அண்ட் டி நிறுவன தலைவர் எஸ்.என்.சுப்ரமண்யத்தின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்.
ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை உட்பட வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என எல் அண்ட் டி நிறுவன தலைவர் எஸ்.என். சுப்ரமண்யம் தெரிவித்திருந்தார். அவர், “ஞாயிற்றுக் கிழமைகளில் உங்களை வேலை செய்ய வைக்க முடியவில்லை என்பதை எண்ணி நான் வருந்துகிறேன். அப்படி என்னால் அதை செய்ய முடிந்தால் நிச்சயம் நான் மகிழ்ச்சி அடைவேன். ஏனென்றால் நான் ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை செய்கிறேன்.
நீங்கள் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்கிறீர்கள்? உங்கள் மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்? அதற்குப் பதில், அலுவலகத்திற்குச் சென்று வேலையைத் தொடங்குங்கள். உலகில் முதல் நிலையில் இருக்க வேண்டுமென்றால் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்” என ஊழியர்கள் மத்தியில் பேசிய போது எஸ்.என்.சுப்ரமண்யம் தெரிவித்தார்.
எஸ்.என்.சுப்ரமண்யம் தெரிவித்த கருத்தை கடுமையாக கண்டித்துள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன், ‘வாரத்தில் 90 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டுமென எல் அண்ட் டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம் பேசியுள்ளார். தொழிலாளர்கள் 40 மணி நேரம் வேலை செய்தே சுப்பிரமணியத்தின் வருட சம்பளம் 51 கோடி. முந்தைய வருடத்தை விட 43 சதவிகித உயர்வு.
தான் மேலும் லாபமடைய தொழிலாளர்கள் 90 மணி நேரம் உழையுங்கள் என்கிறார். அலெக்ஜாண்டர் தனது கைகளை சவபெட்டிக்கு வெளியே விரித்து வைக்க ஏன் சொன்னார் தெரியுமா?. சுப்பிரமணியன்கள் தொடர்ந்து வருவார்கள் என்பதால் தான். தொழிலாளி 8 மணி நேரத்தை சட்ட உரிமை ஆக்கியது ஏன் தெரியுமா?. இது போன்ற அபத்தமான போதனைகளை நிரந்தரமாக சவப்பெட்டியில் அறையத்தான்.
நீங்கள் செல்வம் பெருக்க தொழிலாளர்களின் இணையர்களின் முகங்களை கொச்சைப்படுத்தும் துணிவை உங்களுக்கு எந்த லாபவெறி கொடுத்ததோ, அந்த லாபவெறியை முறித்து உங்களையும் மனித சுபாவத்திற்கு பக்கத்தில் கொண்டுவரத்தான் உழைப்பாளிகளின் உரிமையை இந்த உலகம் போற்றி பாதுகாக்கிறது” என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.