திருவிடந்தையில் சர்வதேச பலூன் திருவிழா: ஆர்வமுடன் குவிந்த பொதுமக்கள்!


மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் 10-ம் தேதி முதல் 12-ம் வரையில் என மூன்று நாட்கள் நடைபெற உள்ள சர்வதேச பலூன் திருவிழாவை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் சர்வதேச பலூன் திருவிழாவின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்று பலூன் திருவிழாவை தொடங்கி வைத்தனர். இன்று முதல் வரும் 12-ம் தேதி வரையில் என மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இந்த பலூன் திருவிழாவில், பிரேசில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட ராட்சச பளுன்களை பறக்க விடும் வல்லுனர்கள் வந்திருந்தனர்.

புலி வடிவம் உள்பட பல்வேறு வடிவங்களில் வண்ண, வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. மேலும், பலுனில் உள்ள பிரத்யேக இருக்கையில் அமைச்சர்கள் ஏறி பயணம் செய்து சோதித்துப் பார்த்தனர். அதிகபட்சம் 50 அடி தூரம் வரை பறக்கும் இந்த ராட்சச பலூன்கள் பொதுமக்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. மேலும், மாமல்லபுரத்தில் முதல்முறையாக நடைபெறும் இந்த பலூன் திருவிழாவை காண, பொதுமக்கள் ஆர்வமுடன் வருகை தந்தனர். மாலை 3 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிவரையில் பலுன்கள் பறக்கவிடப்படும்.

மேலும், பலூன் திருவிழா நடைபெறும் வளாகத்துக்குள் செல்ல12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு இலவச அனுமதியும் பெரியவர்களுக்கு 200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நுழைவு சீட்டை ஆன்லைன் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கவுண்டர்களில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் சந்தரமோகன், சுற்றுலாத் துறை இயக்குநர் ஷில்பா பிரபாகர்சதிஷ், மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ், செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா, மாமல்லபுரம் சுற்றுலாத்துறை அலுவலர் சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

x