பொங்கல் பண்டிகையையொட்டி ஊத்தங்கரை மாட்டு சந்தையில் ரூ.2.50 கோடிக்கு வர்த்தகம்


கிருஷ்ணகிரி: பொங்கல் பண்டிகையையொட்டி, ஊத்தங்கரையில் நடந்த மாட்டு சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் அதிகம் பங்கேற்று மாடுகளை வாங்கியதால், ரூ.2.50 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த மாட்டுச்சந்தையில் மாடுகளை விற்கவும், வாங்கவும் விவசாயிகள், வியாபாரிகள் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக, இந்த சந்தைக்கு கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் வருவது வழக்கம்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி நடந்த மாட்டு சந்தையில், மாடுகளை விற்கவும், வாங்கவும், கேரளா மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர்.

இதுகுறித்து விவசாயிகள், வியாபாரிகள் கூறும்போது, மாட்டுச் சந்தையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனையானது. குறிப்பாக கேரளா மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். பசுமாடுகளின் விலை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரம் வரை இருந்தது. இதனால் சுமார் ரூ.2.50 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

மேலும், கால்நடைகளுக்கான பல வண்ண கயிறுகள், கொம்பு கயிறுகள், திருஷ்டி கயிறு, சங்கு, குஞ்சங்கள், மூக்கணாங்கயிறு, கழுத்தில் அணியும் பலவகை மணிகள், சலங்ககைள், குப்பி பட்டை, சங்கிலி, வண்ணப்பூச்சிகள், சாட்டை உள்ளிட்ட அலங்கார பொருட்களின் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. மாட்டு பொங்கலின் போது, கால்நடை வளர்க்கும் விவசாயிகள் தங்களது மாடுகள், ஆடுகளை அலங்கரிக்க தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.

x