தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு, வேட்டி, சேலை வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


பொங்கல் பரிசுத் தொகுப்பு, இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, சைதாப்பேட்டை, சின்னமலையில் அமைந்துள்ள நியாயவிலைக் கடையில் நேற்று தொடங்கி வைத்தார். உடன், அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், அர.சக்கரபாணி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் டாக்டர் ந.சுப்பையன் ஆகியோர்.

தமிழகத்தில் பொங்கலை முன்னிட்டு 2.21 கோடி குடும்பங்களுக்கு அரிசி, சர்க்கரை, கரும்புடன் கூடிய தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு இலவச வேட்டி - சேலை பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலம் சைதாப்பேட்டை, சின்னமலையில் அமைந்துள்ள நியாயவிலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தையும், இலவச வேட்டி – சேலை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று காலை தொடங்கி வைத்தார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தின் மூலம், ரூ.249.76 கோடி செலவில் 2 கோடியே 20 லட்சத்து 94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவர்.

பொங்கலையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி - சேலை வழங்கும் திட்டத்தின்கீழ், 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் எண்ணிக்கையிலான வேட்டிகள் மற்றும் 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் எண்ணிக்கையிலான சேலைகள் நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,224 நியாய விலைக்கடைகளில் ஜன.13-ம் தேதி வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும். கூட்டுறவுத்துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் கைத்தறித் துறையைச் சேர்ந்த 50 ஆயிரம் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், அர.சக்கரபாணி, மேயர் ஆர். பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., துணை மேயர் மு.மகேஷ்குமார், கூட்டுறவு, உணவுத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை செயலர் கைத்தறித்துறை செயலர் வே.அமுதவல்லி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ந. சுப்பையன், சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இன்று வெள்ளிக்கிழமை (ஜன.10) பொங்கல் தொகுப்பு விநியோகத்துக்காக நியாயவிலைக் கடைகள் அனைத்தும் செயல்படும் என்று உணவுப்பொருள் வழங்கல் இயக்குநர் அறிவித்துள்ளார்.

x