பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.5,000 வழங்க வேண்டும்: கோவில்பட்டியில் தமாகா நூதன போராட்டம்


கோவில்பட்டி: தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் உள்ள தேரடி கருப்பசாமி சன்னதி வாயிலில் கோரிக்கை மனுவை மாலையாக அணிவித்து தமாகாவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைகளுக்கு பரிசுத்தொகுப்பு அறிவித்துள்ளது. அவை இன்று காலை முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பரிசுத் தொகுப்புடன் ரொக்க பணம் இல்லை என அரசு அறிவித்துள்ளது. இதனைக் கண்டித்தும், முதல்வர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என்று வலியுறுத்தியதை போல், தற்போது குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவில்பட்டியில் இன்று தமாகா சார்பில் காதுகளில் பூ வைத்து செண்பகவல்லி அம்மன் கோயில் அருகே உள்ள தேரடி கருப்பசாமி கோயிலில் கரும்புகள் படைத்து, கோரிக்கை மனுக்களை சுவாமி சன்னதி முன்பு மாலையாக அணிவித்து போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு தமாகா வடக்கு மாவட்ட தலைவர் கே.பி. ராஜகோபால் தலைமை வகித்தார். இதில், வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.ஏ. கனி, நகர பொருளாளர் செண்பகராஜன் மற்றும் திரளானோர் பங்கேற்று கோரிக்கை மனுக்களை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப் படத்துக்கு வழங்கினார். பின்னர் சுவாமிக்கு சூடம் ஏற்றி வழிபட்ட தமாகாவினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டவாறு சிதறு தேங்காய்களை உடைத்து வழிபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

x