மதுரை: “அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் திட்டம் வரவே வராது, இதில் சிலர் அரசியல் செய்கிறார்கள். தயவு செய்து தமிழக முதல்வர் சொல்வதை நம்புங்கள்” என அமைச்சர் பி.மூர்த்தி இன்று அரிட்டாபட்டியில் மக்களை சந்தித்து பேசினார்.
மதுரையில் ஜனவரி 7-ம் தேதி டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் மேலூர் சிட்டம்பட்டி டோல்கேட்டிலிருந்து மதுரை மாநகரான தல்லாகுளத்திற்கு 20 கிமீ தூரத்திற்கு மாபெரும் பேரணி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போராட்டம் போல் தன்னெழுச்சியாக போராட்டம் நடக்கும் என தமிழக அரசு எதிர்பார்க்கவில்லை.
இப்பிரச்சினை நடைபெறும் சட்டப்பேரவையில் எதிரொலித்தது. இந்நிலையில் இன்று அப்பகுதி மக்களை சந்தித்து தமிழக அரசின் நிலைப்பாடுகளை தெரிவிக்க அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மாவட்ட நிர்வாகத்தினர் மக்களை சந்தித்தனர். இதில் அரிட்டாபட்டி, அ.வல்லாளபட்டி, கிடாரிப்பட்டி, தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி கிராமங்களில் மக்களை சந்தித்து பேசினார். அப்போது மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாவட்ட எஸ்பி அரவிந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
முதலில் அரிட்டாபட்டியில் கிராம மக்களை சந்தித்து அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: “டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் என்ன முடிவெடுத்துள்ளார் என்பதை, அரிட்டாபட்டி பகுதி கிராமங்களுக்கு சென்று மக்களின் மனநிலையை அறிந்து அவர்களுக்கு தெளிவுபடுத்துங்கள் என எங்களை அனுப்பியுள்ளார். இதன் மூலம் மேலூர் மக்களின் வாழ்வாதாரத்தின் மீது தமிழக முதல்வர் எந்தளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளார் என்பதை கண்டறியலாம். இத்திட்டத்திற்கு எதிராக அரிட்டாபட்டியில் கிராம சபைக் கூட்டம் கூட்டியபோது நானும் பங்கேற்றேன்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது எனவும், அத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சட்டப்பேவைரயில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கிராம சபைக்கூட்டத்தில் வலியுறுத்தினோம். நீங்கள் சொன்ன கருத்தை நிச்சயமாக தமிழக முதல்வர் நிறைவேற்றித்தருவார் என நானும் வாக்குறுதி தந்தேன். அதேபோல் மேலூரில் விவசாயிகள், வணிகப்பெருமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றேன். தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என சொன்னார்கள். உடனடியாக ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடத்தினோம்.
உடனடியாக இரண்டுநாளில் சட்டப்பேரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றினோம். அப்போது சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தில் யார் எதிர்த்தார்கள், ஆதரித்தார்கள் என்பதை நீங்கள் நேரடியாக பார்த்திருப்பீர்கள். அதைப்பற்றி நான் பேசப்போவதில்லை. நம் பகுதியைப் பொறுத்தவரையில் எந்தக் கட்சியைப்பற்றியும், எந்த சமுதாயத்தைப் பற்றியும் பேசத் தேவையில்லை. அனைத்துக்கட்சிகளும் ஒன்றுகூடி அந்த தீர்மானம் நிறைவேற்றினோம்.
நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டம் வராது, அப்படி ஒருவேளை வந்தால் நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று சொன்னார் என்றால் மேலூர் பகுதி மக்கள் மீது முதல்வர் எந்தளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். நேற்று நடந்த சட்டமன்றத்தில் கூட டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து கொண்டுவந்த தீர்மானத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா என முதல்வர் கேட்டார். சிலஅரசியல் கட்சியினர் நேரடியாக பதில் சொல்லாமல் மழுப்பிவிட்டு, நாங்கள் தான் நீங்கள் கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்தோமே என்றனர்.
நான் இதையெல்லொம் சொல்வதற்கு காரணம் இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம். எதையும் பேசிவிட்டு செல்லலாம். அதில் யாரும் தலையிட முடியாது. எங்களைப் பொறுத்தவரையில் நமது முதல்வர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார், திரும்பவும் சொல்கிறேன் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் திட்டம் வரவே வராது. நேற்று நிதி அமைச்சர் பேசும்போதுகூட ஒருகைப்பிடி மண்ணைக்கூட அள்ளவிடமாட்டோம் என்றுள்ளார். ஆளும் அரசே நம்பிக்கையுடன் சொல்லும்போது சிலர் அரசியல் செய்வதற்காக போராடுகிறார்கள்.
போராடுவது ஜனநாயக உரிமை. ஆனால் செய்ய முடியாததை எல்லாம் நான் செய்வேன், அதை நீங்களும் செய்யுங்கள் எனச் சொல்கின்றனர். பொதுவாக மக்களுக்கு தைரியமாக இருங்கள் எனவும், ஆறுதலாகவும் சொல்ல வேண்டுமே தவிர நடக்காததை எல்லாம் நடப்பதுபோல் தூண்டிவிடக்கூடாது. தமிழக அரசு முடிவு பண்ணவேண்டியதை ஏலம் விட வேண்டியதை தன்னிச்சையாக மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது. மத்திய அரசு ஏலம்விட்டாலும் மாநில அரசு அனுமதிக்காது. திமுக கட்சி சார்பில் பேசுகிறேன் என யாரும் நினைக்கவேண்டாம், டங்ஸ்டன் திட்டம் வரவே வராது. அரிட்டாபட்டியை ஒதுக்கிவிட்டு மற்ற பகுதியில் ஆய்வு செய்யலாமா என டெல்லியில் கேட்டதாக சொன்னார்கள்.
எந்தப் பகுதியாக இருந்தாலும் ஒரு ஏக்கரைக்கூட மாநில அரசு தராது என்பதை தெளிவுபடுத்துங்கள் என தமிழக முதல்வர் சொல்லியுள்ளார். அப்படி ஆரம்பித்தால் முதல் போராட்டக்களத்தில் நாங்களும் உங்களோடு துணை நிற்போம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தயவு செய்து நாங்கள் சொன்னதைத்தான் செய்துகொண்டிருக்கிறோம். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போராடலாம். மத்திய அரசை எக்காரணம் கொண்டும் கொண்டுவரக்கூடாது என்கிறோம். மத்திய அரசு ஒத்திவைத்துள்ளதாக சொல்கிறார்கள். அவர்கள் ஒத்திவைத்தாலும் வைத்துக்கொண்டிருந்தாலும் உறுதியாக வராது என்று தமிழக முதல்வர் சொல்கிறார்.
அனைத்து தரப்புமக்கள் சார்பில் அனைத்து கட்சிகளும் சேர்ந்துதான் தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். கட்சியினர் போராடுவது அவர்கள் உரிமை. உங்களோடு தமிழக முதல்வரும் சேர்ந்து இப்பகுதியில் டங்ஸ்டன் திட்டம் வரவிடமாட்டார். எந்த முதலமைச்சரும் சொல்லாததை, நமது முதல்வர் சொல்லியிருக்கிறார். என் பதவியைக்கூட ராஜினாமா செய்வேன் என சொல்லியிருக்கிறார். வாயில் வந்ததை சொல்லிட்டு போக வரவில்லை. அவர் சொன்னார், இவர் சொன்னார், எவர் சொன்னாலும் சரி. சொல்வது மிகவும் ‘ஈசி’, அதை நடைமுறைப்படுத்துவதற்கு தன்னம்பிக்கை, தைரியம் வேண்டும்.
ஆனால் தமிழக முதல்வர் வரவே வராது என்று சொல்லியிருக்கிறார். ஆனால் சிலர் உங்கள் மனநிலையை மாற்றுகின்றனர். உங்களுக்கு எந்த பயமும் கவலையும் பட வேண்டாம். மத்திய அரசு சொல்லிக்கொண்டே இருக்கட்டும். சிவகங்கை மாவட்டத்தில் 25 ஆண்டுக்கு முன்பு மத்திய அரசு கிராபைட் கம்பெனி அமைக்க முயற்சித்தது. தமிழக அரசு எதிர்த்தது. ஆனால் இன்றும் வரவில்லை. நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தை பார்த்திருப்போம்.
அதில் தமிழக முதல்வர் துளியும் பாதிப்பு வராமல் பார்த்துக்கொள்வார். இதை சொல்வதற்காக வந்துள்ளேன். மத்திய அரசு கொண்டுவந்திடுமோ என்ற பயம் கொள்ளத் தேவையில்லை. மேலூர் மக்களோடு சேர்ந்து மதுரை மாவட்ட மக்களும் நமக்கு ஆதரவளிப்பார்கள் தயவு செயது முதல்வர் சொல்வதை நம்புங்கள்” இவ்வாறு அவர் பேசினார்.