சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வானது குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத்தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை கடந்த டிச.4 அன்று விசாரித்த உயர் நீதிமன்றம், சூரியமூர்த்தியின் மனு மீது தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்றும், அப்போது ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் இரட்டை இலை சி்ன்னம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர்கள் என அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டு ஒரு முடிவுக்கு வர வேண்டும், என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்கக்கூடாது எனக்கோரி முன்னாள் எம்பி-க்களான ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் கே.சி.பழனிசாமி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தனர்.
தேர்தல் ஆணையத்தின் இந்த விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி அதிமுக பொதுச் செயலாளரான பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது பழனிசாமி தரப்பில் ஆஜரான டெல்லி மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், தற்போது அதிமுகவில் உறுப்பினர்களாக இல்லாத தனிப்பட்ட நபர்கள் கட்சி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனுக்களை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது, என்றார். அதை தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலனும் ஆமோதித்தார்.
தேர்தல் ஆணையத்தின் இந்த நிலைப்பாட்டுக்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்பதை ஏற்கெனவே சொல்லியிருக்க வேண்டியது தானே என கண்டிப்பு தெரிவித்தனர்.
பின்னர் அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே உரிமையியல் வழக்குகள் தொடரப்பட்டு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் சூழலில், இதே விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த விசாரணையும் நடத்தக்கூடாது, என இடைக்கால தடை விதித்தனர். மேலும், இதுதொடர்பாக வரும் ஜன.27ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.