காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் வழிபாடு நடத்தினார். இதனைத் தொடர்ந்து அங்குள்ள சக்கரத்தாழ்வார் சந்நிதியில் சுதர்ஸன ஹோமம் என்னும் சிறப்பு ஹோமத்திலும் பங்கேற்றார்.
கடந்த 2023-ம் ஆண்டு கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கர்நாடக துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றுக் கொண்டார். அவர் தேர்தலுக்கு முன்னரே காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் சென்றதாக கோயில் அர்ச்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து அவர் இன்று (ஜனவரி 9-ம் தேதி) காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்தார். கும்பகோணம் வந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் பச்சைப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்துக்கு வந்தார். அங்கிருந்து காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்தார். அங்கு குடும்பத்தினருடன் வழிபாடு நடத்தினார்.
சுதர்சன ஹோமம்: சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நடைபெற்ற சுதர்சன ஹோமத்தில் டி.கே.சிவக்குமார் பங்கேற்றார். இந்த சுதர்சன ஹோமம் உலக நன்மைக்காக நடத்தப்பட்டதாக கோயில் அர்ச்சகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஹோமத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் உடன் வந்தவர்கள் தவிர வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இந்த சுதர்சன ஹோமம் குறித்து வேதவிற்பன்னர்களிடம் கேட்டபோது சுதர்சன ஹோமம் என்பது மகா சக்தி வாய்ந்த ஹோமம். எதிரிகளிடம் இருந்து காக்கவும், தீயசக்திகளில் இருந்து விடுபடவும், உடல் மற்றும் மன நல பிரச்சினைகளை சரி செய்யவும் பலரால் நடத்தப்படும். இந்த ஹோமம் ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் ஒரு தீர்வாக இருக்கும்.
சில அரசியல் பிரமுகர்கள் தொடர் வெற்றிக்காகவும் இதனை செய்வார்கள் என்றும் தெரிவித்தனர். இந்த சக்திவாய்ந்த ஹோமத்தை கர்நாடக துணை முதல்வர் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள சக்கரத்தாழ்வார் சந்நிதியில் செய்தது காஞ்சிபுரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.