சீமான் பெரியார் பற்றி பேசியதற்கு நான் ஆதாரம் தருகிறேன் - ஆதரவுக்கரம் நீட்டும் அண்ணாமலை!


கோவை: பெரியார் பேசி இருப்பதாக சீமான் கூறிய கருத்தை, பெரியார் எந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார் என்ற ஆதாரத்தை நான் கொடுக்கிறேன். பெரியார் பேசியதை நாம் இப்பொழுது பேச ஆரம்பித்தால் மக்களுக்கு அருவருப்பு வந்துவிடும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “சீமானுக்கு ஆதரவான ஆதாரங்களை நான் தருகிறேன். இதனை பொதுவெளியில் பேச வேண்டியதில்லை என்பது எனது கருத்து. பெரியார் பேசியதாக வெளியாகி இருந்த எத்தனையோ புத்தகங்களை அவர்கள் அழித்து விட்டார்கள். அந்த அளவுக்கு பெரியார் பேசி இருக்கிறார். பெரியார் பேசி இருப்பதாக சீமான் கூறிய கருத்தை, பெரியார் எந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார் என்ற ஆதாரத்தை நான் கொடுக்கிறேன்.

போலீசார் வீட்டிற்கு வந்தால் அந்த ஆதாரத்தை சீமான் கொடுத்தால் போதும். வேறு ஏதும் வேண்டாம். அதனை பற்றி நான் பொதுவெளியில் பேச விரும்பவில்லை. காரணம், பெண்கள், குழந்தைகள் பார்க்கிறார்கள். பெரியார் பேசியதை நாம் இப்பொழுது பேச ஆரம்பித்தால் மக்களுக்கு அருவருப்பு வந்துவிடும். அதை போன்று சில வார்த்தைகள் அதில் இருக்கிறது.

ஆனால் பெரியார் குறித்து சீமான் பேசியது சரிதான் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. என்னை பொறுத்தவரை பெரியார் பேசி இருக்கிறாரா? என்று கேட்டால் அவர் பேசி இருக்கிறார். அதற்கான ஆதாரத்தை தர நான் தயார் என்பதை சொல்கிறேன். நான் இந்த கருத்தை பொதுவெளியில் பேச விரும்பவில்லை” என்று அண்ணாமலை கூறினார்.

x