பெரியாரை எதிர்ப்பதே எனது கொள்கை: மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சீமான்!


புதுச்சேரி: பெரியார் எங்களுக்கு வேண்டாம். திராவிடத்தை எதிர்ப்பதே எங்கள் கொள்கை. பெரியாரை எதிர்ப்பதே எனது கொள்கை. திராவிட சித்தாந்தத்தின் வேரான பெரியாரை வெட்டி சாய்ப்பதே எனது கொள்கை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “ எந்த இடத்தில் பெரியார் எனக்காக நின்றிருக்கிறார்? என் மொழியை இழிவு, சனியன், அதை விட்டொழி, என்று கூறிய போதே உங்கள் கோட்பாடு தகர்ந்து போய்விட்டது. பெரியார் கூறிய பல்வேறு கருத்துகளை சொன்னபோது சான்று கேட்காத நீங்கள், இதற்கு மட்டும் சான்று கேட்பது ஏன்? பெரியாரின் நூல்களை எல்லாம் அரசுடைமை ஆக்கி விட்டு வந்து என்னிடம் சான்று கேளுங்கள் நான் தருகிறேன்.

நீங்கள் எழுதியவற்றையெல்லாம் தனி சொத்தாக்கிக்கொண்டு உங்கள் வீட்டில் வைத்துக் கொண்டால் எப்படி வெளியிடுவது? பெரியார் நூல்களை முதலில் அரசுடைமை ஆக்குங்கள். நீங்கள் என் முன்னோர்களை அவர்களது சாதனைகளை மறைக்க முயலும் போது அதை ஒழிக்க வேண்டிய தேவை வருகிறது. பெரியார் சாதி ஒழிப்பு பேசினார், பெரியார் பெண்ணியம் பேசினார் என்றால் நாங்கள் பேசாமல் சென்றிருப்போம். ஆனால் பெரியார் மட்டும்தான் சாதி ஒழிப்பு பேசினார். பெண்ணியம் பேசினார் என்று கூறுவதில் தான் சிக்கல் இருக்கிறது.

எங்கள் மூதாதை வள்ளலார், வைகுண்டர், ஆகியோரை தாண்டி நீங்கள் என்ன சீர்திருத்தத்தை செய்து விட்டீர்கள் ?. வஉசி தனது சொத்துக்களை விற்று நாட்டின் விடுதலைக்காக போராடினார். ஆனால் பெரியார் தனது சொத்துக்களை காப்பாற்ற இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பெரியார் என் தாத்தா என்று நான் சொன்னது உண்மை. அது தவறு என்று இப்போது உணர்கிறேன். நான் தொடர்ந்து படித்துக் கொண்டே வரும் போது இதை தவறு என்பதை உணர்கிறேன். என் இனச் சாவில் தான் இவர்கள் எல்லோரும் திருடர்கள் என்பது எனக்குத் தெரிய வருகிறது. 2008, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் தான் திராவிடர்கள் திருடர்கள் என்பது எனக்கு தெரிய வருகிறது.

60 ஆண்டுகளாக திருடிக் கொண்டிருந்த நீங்கள் திருடர்கள் என்றால், வேடிக்கை பார்த்த நாங்கள் குருடர்கள் தான். காலத்திற்கு ஏற்ப எனது கொள்கைகள் மாறுகின்றன. 2008 பிப்ரவரியில் நான் என் தலைவனை சந்திப்பதற்கு முன்பு வரை நானும் இந்த திராவிட திருட்டு கூட்டத்தில் ஒருவனாக தான் இருந்தேன். சந்தித்த பிறகு தான் தமிழர்கள் என்றால் யார், தமிழருக்கு தேவை என்ன, தமிழ் தேசிய அரசியல் என்றால் என்ன என்பதை நான் கட்டமைக்கிறேன்.

என் சிங்காரவேலர், ஜீவானந்தம், அயோத்திதாச பண்டிதர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், காமராஜர், கக்கன், கி ஆ பெ விஸ்வநாதன், வ உ சிதம்பரம் பிள்ளை இவர்களெல்லாம் இந்த நாட்டிற்கு எதுவும் செய்யவில்லையா? பெரியார் மட்டும்தான் செய்தாரா. பெரியாரையும் அம்பேத்கரையும் ஒன்றாக வைப்பதே தவறு. அம்பேத்கர் உலகத்துக்கே வழிகாட்டிய தலைவர். பெரியார் நேரத்துக்கு ஒன்று பேசியவர். பெரியார் எங்களுக்கு வேண்டாம். திராவிடத்தை எதிர்ப்பதே எங்கள் கொள்கை. பெரியாரை எதிர்ப்பதே எனது கொள்கை. திராவிட சித்தாந்தத்தின் வேரான பெரியாரை வெட்டி சாய்ப்பதே எனது கொள்கை” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

x