சென்னை: பொங்கல் திருநாளையொட்டி மகளிர் உரிமைத் தொகையை இன்றே வழங்கிட தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்திலுள்ள தகுதி வாய்ந்த 1 கோடியே 14 லட்சத்து 61 ஆயிரம் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் அவரவர் வங்கி கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது.
எதிர்வரும் பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாயினை முன்கூட்டியே வழங்கிட தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜன.9) உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் மூலம் பயன்பெறும் 1 கோடியே 14 லட்சத்து 61 ஆயிரம் பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கும் பணிகள் வியாழக்கிழமை காலை முதலே தொடங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இன்று அவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.1,000 வரவுவைக்கப்படுகிறது" என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.