சென்னை: `இடஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதி தேடி, தேர்வு செய்யும் நிலையில் இருக்கும் பகுத்தறிவாளர்கள் கம்யூனிஸ்ட்கள் மீது குற் றம்சாட்டலாமா?’ என ஆ.ராசாவின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா “கம்யூனிஸ்ட்கள் சுயநலவாதிகளாக மாறிவிட்ட காரணத்தால் கொள்கை தோற்றுப்போய் விட்டது” என்ற அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார்.
“கம்யூனிசம் பிறந்த இடத்திலேயே செத்துவிட்டது”, “முதலாளித்துவத்துக்கு மாற்று இல்லை” என்று தத்துவ எதிரிகள் கொக்கரித்துக் கொண்டிருந்த வேளையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, “சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிஸ்ட்களுக்கு ஏற்பட்டது தோல்வி அல்ல; அது தற்காலிக பின்னடைவு மட்டுமே” என்று கூறியதை ஆ.ராசா தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு இல்லாத காலத்தில் பட்டியலின சமூகத்தில் இருந்து தலைவர்களை உருவாக்கி, நாடறிய உயர்த்தி பிடித்த கம்யூனிஸ்ட்கள் மீது, இடஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதி தேடி, தேர்வு செய்யும் நிலையில் இருக்கும் பகுத்தறிவாளர்கள் குற்றம்சாட்டுவது பொறுப்பற்ற செயலாகும். ஆ.ராசா, இப்படி பொறுப்பற்ற முறையில் பேசி வருவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.