உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தென் மாவட்ட வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பு: தலைமை நீதிபதிக்கு கடிதம்


கோப்புப்படம்

மதுரை: உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்ட தென் மாவட்ட வழக்கறிஞர்களின் பெயர்களை பரிசீலிக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மொத்த நீதிபதிகள் பணியிடங்கள் 75 ஆகும். தற்போது 65 நீதிபதிகள் பணியில் உள்ளனர். இந்தாண்டில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் ஓய்வு பெறவுள்ளனர். இதனால் நீதிபதி பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், ஏற்கெனவே காலியாக உள்ள நீதிபதி பணியிடங்கள் மற்றும் இந்தாண்டு ஓய்வால் காலியாகும் நீதிபதி பணியிடங்களையும் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிபதிகளாக வழக்கறிஞர்களை பரிந்துரைக்கும் போது அனைத்து சமூகத்திற்கும் உரிய சமமான பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீதிபதிகள் நியமனத்தில் தென் மாவட்ட வழக்கறிஞர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற அமர்வு மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் (எம்பிஏ) தலைவர் எம்.கே.சுரேஷ், பொதுச் செயலாளர் ஆர்.வெங்கடேசன் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

எம்பிஏ செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக அனுப்பியுள்ள கடிதம் குறித்து விவாதிக்கப்பட்டது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறோம்.

நீதிபதிகள் பணிக்கு வழக்கறிஞர்கள் பெயர்களை பரிசீலிக்கும் போது தென் மாவட்ட வழக்கறிஞர்களின் பெயர்களையும் பரிசீலிக்க வேண்டும் என ஏற்கெனவே தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்ட தென் மாவட்ட வழக்கறிஞர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

x