யுஜிசியின் புதிய விதிகள் என்பது மாநில அரசு மீது தொடுக்கப்படும் யுத்தம்: சி.வி.சண்முகம் ஆவேசம்


விழுப்புரம்: மத்திய அரசு பல்கலைக்கழக மானியக் குழு தொடர்பாக புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. அதில் மாநில உரிமை முற்றிலுமாக பறிக்கப்படுகிறது. பல்கலைக்கழகம் தொடர்பான மத்திய அரசின் புதிய விதிகள் மாநில அரசு மீது தொடுக்கும் யுத்தமாகும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று மாவட்ட செயலாளரான சிவி சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம். மாநில உரிமைகள் விட்டுக்கொடுக்கப்படுகிறது, பறிக்கப்படுகிறது. மத்திய அரசு பல்கலைக்கழக மானியக் குழு தொடர்பாக புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. அதில் மாநில உரிமை முற்றிலுமாக பறிக்கப்படுகிறது. மாநில அரசு சார்பில் உறுப்பினர்களை நியமிக்க முடியாது என மத்திய அரசு மோசமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. மத்திய அரசு தனது அதிகார துஷ்பிரயோகத்தை செயல்படுத்தி வருகிறது.

மேலும் ஆசிரியர் அல்லாதவரையும் துணை வேந்தர் பதவிக்கு நியமிக்கலாம் என புதிய விதி உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல பல்கலைக்கழகத்தில் பத்து சதவீத இடம் தனியாருக்கும், மேலும் பத்து சதவீதம் அவுட்சோர்சிங் முறையிலும் ஆட்கள் நியமிக்கப்படவுள்ளது. இந்த முறை இடஒதுக்கீடு முறைக்கு எதிரான நடவடிக்கை. குறிப்பாக கல்வித்துறையில் எடுக்கும் நடவடிக்கைக்கு என்ன காரணம்.?. மறைமுகமாக இந்தி திணிப்பையும், மத்திய அரசின் கொள்கையை நேரடியாக திணிக்க முயற்சி செய்கிறனர். தேர்ந்தெடுக்கப்படாத ஒருவருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

அதிமுக 32 ஆண்டு ஆட்சியில் தமிழ்நாட்டின் உரிமை காப்பாற்றப்பட்டது. திமுகவின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்?மாநில உரிமை பறிக்கப்படும் போது திமுக அரசு எதிர்ப்பது போல வேடம் போடுகிறது. பல்கலைக்கழகம் தொடர்பான மத்திய அரசின் புதிய விதிகள் மாநில அரசு மீது தொடுக்கும் யுத்தமாகும்.

இரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் மொழியை அழிக்க வேண்டும் அதனை மத்திய அரசு செய்து வருகிறது. இதனை திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது. இதனை எதிர்த்து திமுக அரசு உண்மையாக போராட வேண்டும்’ என்று கூறினார்

x