மதுரை: மதுரை மாவட்டத்தில் அரசு மதுபான கடைகளில் தமிழக முதல்வரின் புகைப்படம் வைக்க வேண்டும் என மதுரை ஆட்சியரிடம் பாஜகவினர் மனு அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்ட பாஜக பிரச்சாரக்குழு செயற்குழு உறுப்பினராக இருப்பவர் எஸ்.சரவணன். இவர் கட்சி நிர்வாகிகள் பலருடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென வந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது; மதுரை மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்களில் குறிப்பாக அரசு கூட்டுறவு மருந்து கடைகளிலும், அரசு நடத்தும் நியாய விலை கடைகளிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படங்கள் வைக்கப்படுகின்றன.
இதேபோல் தமிழக அரசு நடத்தும் மதுபான கடைகளிலும் தமிழக முதல்வரின் படத்தை வைக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் சுமார் 318 மதுபான கடைகள் உள்ளன. மதுபான கடைகளின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மது வீட்டுக்கும், நாட்டுக்கும், உயிருக்கும் கேடு என்ற அடிப்படையில் அனைத்து அரசு மதுபான கடைகளையும் மூடுவது வரவேற்புக்குரியது.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மதுபான கடைகளில் தமிழக முதல்வரின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்ற வினோத கோரிக்கையுடன் ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக மனு அளித்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.