கோவை: சிறப்பாக முன்னேறிய திருநங்கையருக்கு விருது மற்றும் ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 'திருங்கையர் தினம் ஏப்ரல் 15-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் 2025-ம் ஆண்டு திருநங்கையர்களில் சிறப்பாக முன்னேறியவர்களில் ஒருவருக்கு முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருது ரூ.1,00,000 காசோலை மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
திருநங்கையர்கள் அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கையர் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.
இவ்விருதிற்கு விண்ணப்பிக்கும் திருநங்கையர்கள் உரிய கருத்துருக்களுடன்‹ www.awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி உரிய வழிமுறைகளுடன் கருத்துருக்களை பிப்ரவரி 21-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கலாம்.' இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.