சென்னை: ஆளுநரையும், அதிமுக - பாஜகவையும் எதிர்த்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ‘நீங்கள் பாடம் எடுக்கும் இடத்தில் நாங்கள் இல்லை. ஆளுநரை விரட்டும் நாள் வெகுதூரத்தில் இல்லை’ என்று மொழி எம்.பி. தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளியேறியதால் சர்ச்சை ஏற்பட்டது.
இதையடுத்து, தமிழகத்தையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும், ஆளுநரைக் காப்பாற்றும் அதிமுக - பாஜககள்ளக் கூட்டணியைக் கண்டித்தும், திமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன், கிரிராஜன், அந்தியூர் செல்வராஜ், கனிமொழி என்.வி.என்.சோமு மற்றும் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, வேலு, பரந்தாமன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்பிபேசியதாவது: குழந்தைகள் விடுமுறை எடுப்பதற்கு காரணம் கூறுவதைப்போல் ஆளுநர் கூறுகிறார். விடுமுறை விண்ணப்பம் எழுதி அனுப்பினால், முதல்வர் விட்டுவிடுவார். எதிரிகளை புறமுதுகிட்டு ஓடச்செய்யும் இயக்கம் திமுக. முதல்வர் எழுந்து நின்றாலே ஆளுநர் ஓடிவிடுகிறார்.
தமிழக சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படும். அதுதான் மரபு. நாங்கள் தேசிய கீதத்தை அவமதிக்கவில்லை. உங்களுக்கும் நாட்டு விடுதலைக்கும் என்ன சம்பந்தம்? தமிழகத்தில் இருந்து நாட்டின் விடுதலைக்காக எத்தனையோ பேர் போராடி சுதந்திரத்தைப் பெற்றுத் தந்துள்ளனர்.
ஆனால், நீங்கள் மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்து வெளியில் வந்தவர்கள். உங்களுக்கும் சுதந்திரத்துக்கும், தேசிய கீதத்துக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. நீங்கள் பாடம் எடுக்கும் இடத்தில் நாங்கள் இல்லை. நாங்கள் பி.எச்டி. பாஸ் செய்துவிட்டோம். நீங்கள் பள்ளி அளவில்தான் உள்ளீர்கள். ஆளுநரை ஓடஓட விரட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. பொறுத்தது போதும் என்ற ஒருநாள் வரும்போது உங்கள் நாவை அடக்கி விடுவீர்கள்.
ஆர்எஸ்எஸ் இந்துத்துவா கூட்டத்தை எதிர்த்து முதல்வர் தொடர்ந்து போராடி வருகிறார். ஆளுநரை தொடர்ந்து எதிர்ப்போம். மக்களின் அரணாக முதல்வர் இருக்கும்போது, ரப்பர் ஸ்டாம்ப் ஆளுநருக்கு எதற்கு அரசியல். பாஜகவை தொடர்ந்து அச்சுறுத்தும் இயக்கம் திமுக. இவ்வாறு அவர் பேசினார்.
1500 பேர் கைது: தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக எம்பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உட்பட திமுகவை சேர்ந்த சுமார் 1,500 பேர் மீது சைதாப்பேட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தடையை மீறி போராட்டம் நடத்துதல், அரசு ஊழியரின் உத்தரவை மீறுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.