தமிழகத்தில் தைப்பொங்கல் கொண்டாடும் ஜனவரி 14-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள யுஜிசி-நெட் தேர்வுகளை, மற்றொரு நாளுக்கு மாற்ற வேண்டும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தேசிய தேர்வு முகமையால் ஜன. 14-ம் தேதி உள்ளிட்ட நாட்களில் யுஜிசி-நெட் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வருவதால், தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் மிக முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வரும் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினராலும் அறுவடைத் திருவிழாவாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ஜனவரி 13 முதல் 16 வரை 4 நாட்கள் அனைத்து தமிழ்ச் சமூகத்தினராலும் இப்பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2025 ஜன. 14 முதல் 17 வரை அரசு விடுமுறை நாட்களாக தமிழக அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையாக சுமார் 3,000 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை சுட்டிக்காட்டும் பண்டிகையாக அமைந்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையைப் போலவே, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
எனவே, திட்டமிட்டபடி பொங்கல் விடுமுறையில் யுஜிசி-நெட் தேர்வை நடத்தினால், ஏராளமான தேர்வர்கள் சிரமத்துக்கு உள்ளாக நேரிடும் .இதே காரணத்துக்காக பட்டயக் கணக்காளர்கள் தேர்வு ஏற்கெனவே மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, யுஜிசி-நெட் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை மற்ற நாட்களுக்கு மாற்றியமைக்க வேண்டும். அறுவடைத் திருவிழா கொண்டாடப்படும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களின் மாணவர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் தேர்வுகளுக்கு எளிதில் வர இயலும் வகையில் தேர்வை நடத்த வேண்டும். முந்தைய ஆண்டுகளில் பொங்கல் பண்டிகைக் காலங்களில் தேசிய தேர்வு முகமை யுஜிசி-நெட் தேர்வை நடத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே, யுஜிசி-நெட் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை ஜனவரி 13 முதல் 16 வரையிலான நாட்களில் நடத்துவதைத் தவிர்த்து, வேறு நாட்களுக்கு மாற்றியமைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் தலையிட்டு, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படும் காலங்களில் யுஜிசி-நெட் தேர்வுகள் நடத்துவதை தவிர்த்து, மற்றொரு நாட்களில் தேர்வை நடத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.