மன்மோகன் அமைச்சரவையில்தான் தமிழர்கள் அதிக அளவில் கோலோச்சினர்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்


சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரின் படங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்து மரியாதை செலுத்தினார். உடன், செல்வப்பெருந்தகை, கி.வீரமணி, வைகோ உள்ளிட்ட ‘இண்டியா’ கூட்டணி கட்சி தலைவர்கள். படம்: ம.பிரபு

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில்தான் தமிழர்கள் அதிகளவில் மத்திய அமைச்சர்களாகக் கோலோச்சினர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஈவிகேஎஸ். இளங்கோவன் ஆகியோரது உருவப்படங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 10 ஆண்டுகள் ஆட்சி நடத்தினார். அவருடைய ஆட்சியில் 100 நாள் வேலை திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், கல்வி பெறும் உரிமைச் சட்டம், உணவு பாதுகாப்புச் சட்டம், கையால் மலம் அள்ளுவதைத் தடை செய்யும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

அவரது அமைச்சரவையில் 21 தமிழர்கள் மத்திய அமைச்சர்களாக இடம்பெற்றிருந்தனர். மிக அதிக அளவில் தமிழர்கள் மத்திய அரசில் கோலோச்சியது அவருடைய அமைச்சரவையில்தான். தமிழ் செம்மொழி என்பதை அறிவித்த வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரர் மன்மோகன்.

சென்னையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், சென்னை மெட்ரோ ரயில் என எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்கள் தமிழகத்துக்கு வரக் காரணமாக இருந்தவர். முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் நட்போடு அவர் இருந்தது யாராலும் மறுக்க முடியாது. தமிழகத்தின் கனவுகளை மதிப்பவராக மன்மோகன் சிங் இருந்தார். தென்னக மக்களின் குரல்கள் தேசிய அளவிலான திட்டங்கள், கொள்கைகளில் எதிரொலிப்பதை அவர் உறுதி செய்தார்.

ஈவிகேஎஸ்.இளங்கோவன் மகன் திருமகன் ஈ.வெ.ரா மறைந்தபோது நான் வேதனைப்பட்டேன், மனம் உடைந்து போனேன். மகன் மறைந்ததால் இளங்கோவன் போட்டியிட்டு, வெற்றிபெற்று அந்தத் தொகுதியின் எம்எம்ஏ.வாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்த மகிழ்ச்சியும் நீடிக்காத வகையில் அவர் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்.

தற்போதைய திமுக ஆட்சிதான் உண்மையான காமராஜர் ஆட்சி என்று இளங்கோவன் வெளிப்படையாகக் கூறினார். துணிச்சலாக பேசும் உறுதிமிக்க செயல்வீரர் அவர். இப்படிப்பட்ட இரு தலைவர்களை நாம் இழந்திருக்கிறோம். அவர்களுக்கு என் புகழஞ்சலி. இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்நிகழ்வில், காங்கிரஸ் தமிழகப் பொறுப்பாளர் அஜோய்குமார், செயலாளர் சூரஜ் எம்.என்.ஹெக்டே, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி., தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

x