புதுச்சேரி: சர்வதேச யோகா திருவிழாவில் சென்னையைச் சேர்ந்த முகிலன், ரேனுஸ்ரீ ஆகியோர் சிறந்த வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். புதுவை அரசு சுற்றுலாத்துறை சார்பில், 30-வது சர்வதேச யோகா திருவிழா, பழைய துறைமுக வளாகத்தில் கடந்த, 4ந் தேதி தொங்கியது.
விழாவையொட்டி நடந்த யோகா போட்டிகளில் புதுச்சேரி - 469; ஆந்திரா - 30; டில்லி - 22; குஜராத் - 15; அரியானா - 15; கர்நாடகா - 200; கேரளா - 2; மகாராஷ்டிரா - 12; தமிழ்நாடு - 421; தெலுங்கானா - 9; உத்தரபிரதேசம் - 1; மற்றும் மேற்கு வங்கம் -12, என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருபாலர் பிரிவிலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். தொடர்ந்து யோகா நித்ரா பயிற்சி, போட்டிகள், பயிலரங்கங்கள், கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
இன்று புதுவை கடற்கரை சாலையில் யோகா செயல் விளக்கம் மற்றும் மூச்சு பயிற்சி விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. யோகா செயல் விளக்க பயிற்சியில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் வெளிமாநில கலைஞர்கள் பங்கேற்று பல வகையான யோகாசனங்களை செய்தனர்.
இதில் வெளிமாநிலத்தை சேர்ந்த வயது முதிர்ந்த யோக கலைஞர்கள் மிக கடினமான யோகாசனங்களை செய்து பலரையும் வியக்க வைத்தனர். மூக்கின் ஒரு துவாரத்தில் நூலை விட்டு வாய் வழியே எடுத்தும், மூக்கின் ஒரு துவாரத்தில் நீரை இழுத்து மறு துவாரத்தில் வழியே வெளியேற்றியது அனைவரது பாராட்டையும் பெற்றது. காவல்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற பின் 60 வயதில் யோகா பயின்று 20 ஆண்டுகளாக யோகாசனம் செய்து வருவதாக வட மாநிலத்தை சேர்ந்த மூத்த யோகா கலைஞர் கூறினார்.
தொடர்ந்து குழந்தைகளுக்கான யோகா, இறுதி போட்டி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று இரவு நிறைவு நிகழ்வில் சட்டப்பேரவைத்தலைவர் செல்வம், சுற்றுலாத்துரை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் பங்கேற்று யோகா போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகளை வழங்கினர். சர்வதேச யோகா திருவிழாவில் சிறந்த வெற்றியாளர்களாக சென்னையைச் சேர்ந்த முகிலன், ரேனுஸ்ரீ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.