சென்னை: திமுகவினருக்கு மட்டும் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியது எப்படி? காவல் ஆணையருக்கு எதிராக பாமக வழக்கு தொடர்ந்துள்ளது
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து இன்று காலை மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த திமுக சார்பில் நேற்று மாலை அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் ஆளுங்கட்சி என்பதால் திமுகவினருக்கு மட்டும் விதிகளை மீறி போலீஸார் உடனடியாக அனுமதி வழங்கியுள்ளதாகவும், அதன்படி திமுகவினர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தியுள்ளதாகவும், ஆனால் போராட்டம் நடத்த எதிர்கட்சியினருக்கு மட்டும் போலீஸார் அனுமதி மறுப்பதாகவும் கூறி பாமக வழக்கறிஞர் கே.பாலு உயர் நீதிமன்றத்தி்ல் நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக இன்று காலை முறையீடு செய்தார்.
அப்போது வழக்கறிஞர் கே.பாலு, ‘‘ ஆளுநரைக் கண்டித்து போராட்டம் நடத்தும் வகையில் திமுகவினருக்கு மட்டும் காவல்துறையினர் விதிகளை மீறி உடனடியாக அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால் எதிர்கட்சியினருக்கு அனுமதி மறுக்கின்றனர். எனவே சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக தாக்கல் செய்யப்படும் மனுவை அவசர வழக்காக இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்”என்றார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாமக கொள்கை பரப்புச் செயலாளரான பி.கே. சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘ ஜனநாயக வழியில் போராட்டம் நடத்த 5 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும் எனக்கூறி எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கும் போலீஸார், ஆளுங்கட்சியான திமுகவினருக்கு மட்டும் ஒரே நாளில் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல், எந்த விண்ணப்பமும் பெறாமல் ஆளுநரைக் கண்டித்து போராட்டம் நடத்த அனுமதியளித்து இருப்பது சட்டவிரோதமானது’ என அதில் கோரியுள்ளார்.