அனகபுத்தூர்: அனகாபுத்தூரில் கடன் தொல்லை தாங்காமல் ரஜினி ரசிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ரகு (எ)ரஜினி ரகு (54). இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி சித்ரா(45) என்ற மனைவி உள்ளார். ரகு, தனக்கு 15 வயது இருக்கும்போது முதன் முதலாக நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்த "நாட்டுக்கொரு நல்லவன்" என்ற திரைப்படத்தை திரையரங்கில் பார்த்தார்.
அதில், ரஜினியின் நடிப்பில் கவர்ந்திழுக்கப்பட்ட ரகு, அன்று முதல் நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர் ஆனார். ரஜினி மீது ஏற்பட்ட ஈர்ப்பால் தனது பெயரைக் கூட "ரஜினி ரகு" என்று மாற்றிக் கொண்டார். பின்னர், ரகு தன்னை அதே பகுதியில் உள்ள ரஜினி ரசிகர் மன்றத்திலும் இணைத்துக் கொண்டார். அத்துடன் கண்ணில் கண்ட ரஜினி போட்டோ போட்ட படங்களை எல்லாம் வாங்கி தனது வீட்டில் அடுக்கத் தொடங்கினார். அவரது சிந்தனை செயல் பேச்சு அனைத்தும் நடிகர் ரஜினிகாந்த் பற்றியதாகவே இருந்தது.
அதனால் ரஜினியின் ஆரம்பகால படம் முதல் தற்போதைய படமான "வேட்டையன்" வரை ஒரு படம் விடாமல் அனைத்தையும் முதல் ஷோவில் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அத்துடன் அவரது படம் ரிலீஸ் ஆகும் தேதியில் பெரிய அளவில் கட் அவுட் வைப்பது, பாலபிஷேகம் செய்வது, ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
சாதாரண ஆட்டோ தொழிலாளியான ரகுவால் அந்த செலவை ஈடு செய்ய இயலவில்லை. அதனால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் வட்டிக்குக் கடன் வாங்கி, கட் அவுட் வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் பணம் கொடுத்தவர்கள், கடனை திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்யவே, செய்வதறியாவது தவித்த ரகு, அந்த கடனை அடைப்பதற்காக பிரபல தனியார் வங்கியில் லோன் வாங்கியதாக கூறப்படுகிறது.
அந்த லோன் தொகையை வைத்து அக்கம் பக்கத்தினருக்கு வாங்கிய கடனை அடைத்த நிலையில், லோன் கொடுத்த தனியார் வங்கியும் ஒரு கட்டத்தில் பணத்தை திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்தது. மேலும், தான் ஓட்டி வந்த ஆட்டோ தொழிலும் சரியாக செல்லாததால், வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் கடந்த சில தினங்களாக ரகு மிகுந்த சிரமத்திற்கு ஆளானார். இதனால் தனது ஆட்டோவிற்குக் கூட டியூ கட்ட முடியாமல் சிரமப்பட்டார்.
இதற்கு மேல் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வழியே இல்லை. தலைக்கு மேல் வெள்ளம் சென்று விட்டது என்று நினைத்த ரகு, இன்று காலை தனது மனைவி வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் கதவை உள் பக்கமாக பூட்டிக் கொண்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடையே வெளியே சென்றிருந்த மனைவி வீட்டிற்கு வந்து பார்த்த போது, கதவு உள்பக்கமாக பூட்டி இருந்ததால், அவரது பெயரைச் சொல்லி அழைத்துப் பார்த்தார். அப்பொழுதும் கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்து உள்ள சென்று பார்த்த போது, அங்கு ரகு தூக்கிட்டு இருந்த நிலையில் இருப்பதைக் கண்டு சித்ரா அதிர்ச்சி அடைந்தார்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் இறந்த ரகு உடலை மீட்டு, அதனை பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனது கணவர் ஆட்டோ ஓட்டி வந்தாலும் கூட ,அவர் இருந்த போதும் சரி, இறந்த போதும் சரி, தனது வாழ் நாளையே நடிகர் ரஜினிகாந்திற்கு அர்ப்பணித்துச் சென்றார்.
அவரது துணை இல்லாமல் நான் இன்று தனியாக தவிக்கிறேன். அவர் வாங்கிய கடனை நான் எப்படி திருப்பி செலுத்தப் போகிறேனோ தெரியவில்லை என்று ரகு நடிகர் ரஜினியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை எல்லாம் வைத்துக் கொண்டு கதறி அழுதது காண்போரை கண்கலங்கச் செய்வதாக இருந்தது. ரஜினி படத்திற்கு கட் அவுட், பால் அபிஷேகம் செய்வதற்காகவே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், அவரது தீவிர ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.