மதுரை: அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவர் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தனது மனைவியை பிரசவத்துக்காக சேர்த்திருந்தார். அங்கு அவர் மனைவி உயிரிழந்தார். இதையடுத்து மனைவி இறப்புக்கு காரணமான மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கவும் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இதேபோல் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உயிரிழந்த 6 பேரின் உறவினர்களும் இழப்பீடு கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதி குமரேஷ்பாபு விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஆர்.அழகுமணி, ஆர்.வெங்கடேசன் உட்பட பலர் வாதிடுகையில், ''அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டவர்கள் உரிய நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளுக்கு மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவமனை பணியாளர்களின் கவனக்குறைவே காரணம். எனவே அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்'' என்றனர்.
அரசு தரப்பில், ''மருத்துவ கவனக்குறைவால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இழப்பீடு கோரி உரிமையியல் நீதிமன்றங்களில் தான் மனு தாக்கல் செய்ய முடியும். இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல. தள்ளுபடி செய்ய வேண்டும்'' என வாதிடப்பட்டது.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ''மக்களை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. அரசு மக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துகிறது. அனைவருக்கும் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும். மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ள உயிரிழப்புகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் கவனக்குறைவால் நிகழ்ந்தது எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மனுதாரர்கள் வறுமை கோட்டிற்கு கீழுள்ளனர். அவர்களை இழப்பீட்டுக்காக உரிமையியல் நீதிமன்றத்துக்கு அலைய வைக்க முடியாது. இதனால் மனுதாரர்களுக்கு பெரியளவில் இழப்பு ஏற்படும்.
அரசுக்கு நேரடியாக தொடர்பு இல்லாத நிலையிலும், கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்கள், விலங்குகள் மற்றும் மனித தவறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கியுள்ளது. அதன்படி மனுதாரர்களுக்கு 4 வாரத்தில் தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கூடுதல் இழப்பீட்டிற்காக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர மனுதாரர்களுக்கு உரிமை வழங்கப்படுகிறது. அவ்வாறு மனுத்தாக்கல் செய்யும் போது உரிமையியல் நீதிமன்றங்கள் அந்த மனுக்களை நீண்டநாள் நிலுவையில் வைக்காமல் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும்.'' இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.