தமிழக மீனவர்கள் 25 பேருக்கு காவல் நீட்டிப்பு - இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவு


ராமேசுவரம்: தமிழக மீனவர்களின் 25 பேருக்கு இலங்கையில் உள்ள மன்னார், ஊர்காவல்துறை நீதிமன்றங்கள் காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து டிசம்பர் 22ல் கடலுக்குச் சென்ற சேகு பூண்டி ராஜ், அந்தோணி ஆரோன் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு படகுகளை சிறைப்பிடித்து படகுகளிலிருந்து 17 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

17 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் காவல் செவ்வாய்க்கிழமையோடு நிறைவடைந்ததை தொடர்ந்து 17 மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ரஃபிக் ஜனவரி 17 வரையிலும் இரண்டாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.

மேலும், கடந்த டிசம்பர் 08ல் ராமநாபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த கார்த்திக் ராஜா, சகாய ஆண்ட்ரிஸ் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகள் இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் சிறைப்பிடிக்கப்பட்டு, படகுகளிலிருந்து 08 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த 08 மண்டபம் மீனவர்களும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி ஜனவரி 15 வரையிலும் நீதிமன்ற காவலை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து மீனவர்கள் 17 பேர் வவுனியா சிறையிலும், 08 மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

x