சென்னை: எச்.எம்.பி.வி வைரஸ் 3 முதல் 5 நாட்களில் தானாகவே குணமாகி விடும். எந்தவித சிகிச்சைகளும் எடுத்துக் கொள்ளாமல் இருந்தாலே தானாகவே சரியாகிவிடும் எனவே இந்த வைரஸ் தொடர்பாக பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
எச்.எம்.பி.வி தொற்று தொடர்பான துறைரீதியான கலந்தாலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில், நடைபெற்றது. இதனை தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ‘ HMPV என்று சொல்லக்கூடிய Human Metapneumovirus என்கின்ற வைரஸ் தொடர்பாக இன்றைக்கு செய்திதாள்களிலும், சமூக ஊடகங்களிலும் கடந்த ஒரு வார காலமாக செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. பொதுவாக HMPV வைரஸ் பரவி வருகிறது என்று சொல்லப்படும் முன்பே நமது துறையின் உயரலுவலர்கள் சம்மந்தப்பட்ட உலக சுகாதார நிறுவனம் போன்ற அமைப்புகளோடும், அதேபோல் டெல்லியில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சகத்தோடும் தொடர்ந்து தொடர்பில் இருந்துக் கொண்டு இருக்கிறார்கள். இதுபோன்று 2019 இறுதியில் கோவிட் பெருந்தொற்று தாக்குதல் தொடங்கியதுமே அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகளால் உலக சுகாதார நிறுவனம் உடனடியாக மருத்துவ நெருக்கடியை அறிவித்திருந்தார்கள். அது 2023 மே திங்கள் 5 ஆம் தேதி வரை 3 ஆண்டுகளுக்கும் மேலாக நெருக்கடி நிலை ஏற்பட்டது.
அதன்பிறகு மன்கிபாக்ஸ் (Monkey Pox) என்று சொல்லக்கூடிய நோய் பாதிப்பு உலகம் முழுவதும் பரவுகின்றது என்கின்ற வகையில் செய்திகள் பரவத் தொடங்கியதுமே உலக சுகாதார நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பன்னாட்டு விமான நிறுவனங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மிகச் சரியாக செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி போன்ற இடங்களில் உள்ள பன்னாட்டு விமானநிலையங்களில் நேரிடையாக ஆய்வு செய்து விழிப்புணர்வு பதாகைகள் வைத்து, தனி அறைகள் ஏற்பாடு செய்து, மருத்துவக்குழுவையும் அங்கு அமைத்து நடவடிக்கைகள் மேற்கொண்டோம்.
அந்த வைரஸ் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் எந்தவித பாதிப்புகளையும் பெரிய அளவில் ஏற்படுத்தவில்லை. இந்தநிலையில் HMPV என்று சொல்லக்கூடிய வைரஸ் பற்றிய செய்தி தொடங்கியவுடனேயே நாமும் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருகிறோம். இந்த வைரஸ் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் இதுவரை எந்தவிதமான அறிவுறுத்தல்களும் செய்யப்படவில்லை. அதேபோல் ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக இதுபோல் பாதிப்புகள் ஏற்படும்போது குறிப்பாக மாநிலங்களில் உள்ள சுகாதாரத்துறைகளுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்புவார்கள். அதுவும் கூட இதுவரை இல்லை. ஒன்றிய அரசு மருத்துவத்துறை செயலாளர் மூலம் காணொளிக்கூட்டம் நடைபெற்றது. அந்தக்கூட்டத்தில் நமது துறையின் செயலாளர் மற்றும் உயரலுவலர்கள் கலந்துக் கொண்டனர். ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் அவர்கள் காணொளிக்கூட்டத்தில் பல்வேறு தகவல்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது இந்த வைரஸ் குறித்து பயப்படத் தேவையில்லை. பதட்டப்படவும் தேவையில்லை.
இது 50 ஆண்டுகளுக்கு முன்னாள் பரவிய வைரஸ். 2001 இல் இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்புகள் வந்தால் 3 முதல் 6 நாட்களுக்கு சளி, இருமல் போன்ற சிறிய வகை பாதிப்புகள் இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் நுரையீரல் பாதிப்புகள் ஏற்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் பருவமழை தொடங்குகின்றபோது வருகின்ற காய்ச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும்போதும் கூட முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிவது போன்ற நடவடிக்கைகள் உலகம் முழுவதும் தற்போதும் இருந்து வருகிறது.
கோவிட் காலங்களில் உள்ள வைரஸ் அதனைத் தொடர்ந்து ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், கம்மா, கப்பா, ஒமைக்ரான் போன்ற பல்வேறு வகைகளில் இந்த வைரஸ் பாதிப்பு இருந்து வந்தது. அதில் வீரியம் மிக்க வைரஸ், வீரியம் குறைந்த வைரஸ் என்று பல வகைகள் இருந்தது. அன்று அரசு எடுத்த நடவடிக்கை RTPCR பரிசோதனை தனியார் மையங்களில் அதிகப்படுத்தியது.
பாதிப்புக்குள்ளானவர்களுக்கு ஏற்ற சிகிச்சைகள் வழங்கி பாதிப்புகளை அரசு கட்டுப்படுத்தியது. ஆனால் இந்த வைரஸ் பொறுத்தவரை அந்தமாதிரியான எந்தவித பாதிப்புகளும் இல்லை. 3 முதல் 5 நாட்களில் தானாகவே குணமாகி விடும். இதற்கென பிரத்யேகமாக எந்தவித சிகிச்சைகளும் இல்லை. எந்தவித சிகிச்சைகளும் எடுத்துக் கொள்ளாமல் இருந்தாலே தானாகவே சரியாகிவிடும் என்கின்ற நிலையில் இருந்து வருகிறது. எனவே இந்த வைரஸ் தொடர்பாக பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை.
தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை HMPV தொற்று சேலத்தில் ஒருவருக்கும், சென்னையில் ஒருவர் என 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. சேலத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்கெனவே புற்றுநோய் பாதிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற இணை நோய்கள் உள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்டவர் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் என 2 பேருமே நலமுடன் இருக்கிறார்கள். எனவே இந்த வைரஸ் தானாகவே சரியாக கூடியது, யாரும் பயப்படத் தேவையில்லை. நேற்று நானும் கூட சீனாவில் இருந்து, இங்கே தமிழ்நாட்டிலிருந்து மருத்துவம் பயிலச்சென்ற ஒரு மாணவரின் பேட்டியைப் பார்த்தேன்.
அவர் காணொலி வாயிலாக சீனாவின் மார்க்கெட் பகுதி, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகள் எல்லாம் காட்டி யாரும் பதட்டப்படாமல் பயப்படாமல் சீனாவில் சகஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், நம்முடைய தமிழ்நாட்டில் இது பெரிய அளவில் பதட்டப்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலை அவரும் கூட சொல்லியிருக்கிறார். எனவே இது பெரிய அளவில் பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் இந்த நோய் பாதிப்புகள் என்பது காய்ச்சல், இருமல், சளி போன்ற உபாதைகள் உள்ளவர்கள் யார் போய் மருத்துமனைகளுக்கு அல்லது ஆய்வகங்களுக்கு போய் பரிசோதனை செய்துகொண்டால் ஒரு பத்து, இருபது பேரில் யாருக்காவது இது போன்ற இந்த வைரஸின் தாக்கம் இருக்க கூடும். இருந்தாலும் கவலைப்பட தேவையில்லை, இது பதட்டப்பட கூடிய அளவிற்கு வீரியமிக்க வைரஸ் அல்ல, ஒரு வீரியம் குறைந்த அளவிலான வைரஸ் தான். நாம் இது குறித்து கவலைப்படவோ அச்சப்படவோ தேவையில்லை.
ஜப்பான் போன்ற நாடுகளில் சாதாரணமாகவே முகக்கவசம் இல்லாமல் யாரும் நடப்பதே இல்லை. இந்த மாதிரியான நோய் பாதிப்புகள் இருக்கின்ற நாடுகளில் முகக்கவசங்கள் அணிவது அந்நாடுகளில் ஊக்குவிக்கப்படுகிறது. அந்த வகையில் நாமும்கூட இந்த பாதிப்பு இருப்பவர்கள், குறிப்பாக பருவமழையை ஒட்டி வருகிற இந்த நோய் பாதிப்புகள் இருப்பவர்கள் பொது வெளியில் செல்கிறபோது முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது. அதேபோல் இந்த நோய் பாதிப்பு இருப்பவர்கள் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவது, சானிடைசர் (Sanitizer) பயன்படுத்துவது, தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது, அதிக அளவிலான சளி, காய்ச்சல், இருமல் இந்த மாதிரியான பாதிப்புகள் சளி தும்மும்போதோ இருமும்போதோ அதனுடைய நீர்த்திவலைகள் மற்றவர்கள் மேல் படும், அது எந்த நோயாக இருந்தாலும் மற்றவர்களை தொற்றும்.
எனவே தொற்று நோய்கள், தொற்றா நோய்களின் பாதிப்பு என்பது தொடர்ச்சியாக மனித இனம் உருவான நாளில் இருந்தே இருக்கிறது. அந்த வகையில் நாம் இதிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், முகக்கவசத்தை இந்த நோய் பாதிப்பு இருப்பவர்கள் பொதுவெளிக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்வது, அந்த நோய் பாதிப்பு இருப்பவர்கள் மட்டுமல்ல எல்லோருமே கை கழுவுவது என்பது தினந்தோரும், ஒரு நாளைக்கு நான்கு, ஐந்து முறை கை கழுவினாலும் எதுவுமே பாதிக்காது. அதனால் எந்த விதமான செலவும் இருக்காது. எந்த விரயமும் உடல் உறுப்புகளில் ஏற்படாது. எனவே அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திக்கொள்வது இந்த மாதிரி நடவடிக்கைகளில் நாம் முழுமையாக இருந்தாலே போதும் அச்சப்படவேண்டிய அவசியம் இல்லை. அரசை பொருத்தவரை கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும் வருகிற செய்திகளை கேட்டு அதற்கான விளக்கங்களை துறைகளிலே கேட்டு எடுக்கப்படுகிற நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து வருகிறார்கள். எனவே, இது குறித்து பெரிய அளவில் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துக்கொள்கிறேன். ஒன்றிய அரசும் கூட இதையேதான் சொல்லியிருக்கிறது.
தமிழ்நாட்டில் மருத்துவக்கட்டமைப்பு என்பது 8,713 துணை சுகாதார நிலையங்கள் இருக்கின்றன. 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கின்றன. 299 வட்டார சுகாதார மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள் இருக்கின்றன. 36 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் இருக்கின்றன. 2 பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைகள் இருக்கின்றன. இவ்வளவு பெரிய மருத்துவ கட்டமைப்புகள் இருக்கிற மாநிலம். இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலேயே வேறு எங்கேயும் இருக்க முடியாது. இவ்வளவு பெரிய மருத்துவ கட்டமைப்போடு இருக்கிறது. எனவே இதற்கென்று தனியாக எதுவும் தேவையில்லை. எது வந்தாலும் சமாளிக்கின்ற அளவுக்கு தமிழ்நாட்டின் மருத்துவத்துறை கட்டமைப்பு மிக பலமாக இருக்கின்றது. VRDL (Viral Research and diagnostic Laboratories) என்கின்ற பரிசோதனை ஆராய்ச்சி அமைப்புகள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் உள்ளது. ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அதை அரசு கண்காணித்து வரும். எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட சுகாதார அலுவலர்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பிற மாவட்ட அலுவலர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தனியார் மருத்துவமனைகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள், அதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் ஆர்.லால்வேனா, இ.ஆ.ப., சிறப்பு செயலாளர் வ.கலையரசி, இ.ஆ.ப., இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை இயக்குநர் மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர் எம்.அரவிந்த், இ.ஆ.ப., மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் பி.உமா மகேஸ்வரி, இ.ஆ.ப., தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் ஆர்.சீதாலட்சுமி, இ.ஆ.ப., தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் மரு.அருண்தம்புராஜ், இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.தி.சி.செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.ஜெ.சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு.ராஜமூர்த்தி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (ESI) இயக்குநர் மரு.இளங்கோ மகேஸ்வரன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.