தேனி: தேனி ராஜவாய்க்காலில் உள்ள தரைப்பாலம் சீரமைக்கும் பணியினால் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே காமராஜர் பேருந்துநிலையத்துக்கு கம்பம், போடி, குமுளி பேருந்துகள் வராது. பென்னிகுவிக் பேருந்து நிலையம் சென்று பயணிக்குமாறு தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.
தேனி கொட்டக்குடி ஆற்றில் இருந்து ராஜவாய்க்கால் வழியே மதுரை சாலை அருகே உள்ள தாமரைக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் செல்கிறது. ராஜவாய்க்காலின் முகத்துவாரத்தில் இருந்து தேனி நகர் வழியே 2.47 கிமீ. தூரம் இந்த வாய்க்கால் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக தொடர் ஆக்கிரமிப்பு காரணமாக வாய்க்காலின் அகலம் குறைந்து நீர் செல்வதும் பாதிக்கப்பட்டது தற்போது மழை மற்றும் சாக்கடை நீர் மட்டுமே சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காமராஜர் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வெளியேறும் பகுதியில் உள்ள தரைப்பாலம் சீரமைக்கும் பணிகள் தொடங்கின. 21 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலத்தில் இருந்து இந்தப்பாலம் தற்போது 4 மீட்டர் அகலமாக மாற்றப்பட உள்ளன.
இதற்காக இப்பகுதி ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளன. இதுவரை பென்னிகுவிக் பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் போடி, கம்பம், குமுளி, மூணாறு பேருந்துகள் காமராஜர் பேருந்து நிலையம் வழியே செல்லும். தற்போது இந்த வழித்தட பேருந்துகள் காமராஜர் பேருந்து நிலையம் வராமல் பெரியகுளம் புறவழிச்சாலை வழியே செல்கின்றன.
தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், ''ராஜவாய்க்காலில் தண்ணீர் தேங்காமல் செல்ல பாலம் அகலப்படுத்தப்படும் பணிநடைபெறுகிறது. மார்ச்சில் இப்பணி முடியும். ஒரே நேரத்தில் வாய்க்காலின் முழுநீளத்துக்கும் பணி நடைபெற்றால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கும் என்பதால் பகுதி அளவுக்கு பாலம் அமைத்து விட்டு பின்பு மீதிப்பகுதியில் பணி நடைபெற உள்ளது'' என்றனர்.