புதுச்சேரி: மின்துறையில் பணியாளர் பற்றாக்குறை நிலவுவதால் பணியாளர் நியமனம் எப்போது என மின்துறை கண்காணிப்பு பொறியாளருடன் நேரு எம்எல்ஏ வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
புதுவை உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ நேரு, பொதுநல அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் மின்துறை அலுவலகத்துக்கு இன்று வந்தார். அங்கு மின்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகத்தை சந்தித்து, மின்துறையில் நிலவும் பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க எப்போது பணி நியமனம் நடைபெறும்? என கேட்டார்.
மேலும் உருளையன்பேட்டை தொகுதி மட்டுமின்றி நகரம் முழுவதும் மின் குறைபாடுகள் உள்ளது. மின் இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மின்துறையில் பணியிடங்களை எப்போது நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கோரி வாக்குவாதம் செய்தார். அவரை சமாதானப்படுத்திய மின்துறை அதிகாரிகள், விரைவில் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், தொகுதியில் நிலவும் மின் இடர்பாடுகள் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.