பொருளாதாரம் வளர்ச்சி அடைவதுடன் மருத்துவம், கல்வி மற்றும் சமூக நலனை மேம்படுத்துவதில் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குவதாக ஆளுநர் உரை குறித்து பேசிய சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு பெருமிதம் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை முழுமையாக வாசித்தார். அதில் இடம்பெற்றிருந்ததாவது: தமிழகம் தொன்மையும், புதுமையும் கலந்து அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. முந்தைய ஆண்டுகளில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 சதவீதமாக இருந்த மாநிலத்தின் பங்கு, கடந்த 40 ஆண்டுகளில் 9.21 சதவீதமாக உயர்ந்துள்ளதே திராவிட இயக்க கொள்கைகளின் வெற்றிக்கு சான்றாகும். பொருளாதாரம் வளர்ச்சி அடைவதுடன், மருத்துவம், கல்வி மற்றும் சமூக நலனை மேம்படுத்துவதில் நாட்டுக்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கால தலைமுறையினரின் வாழ்வை செம்மையாக்க பல முன்னோடித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அத்திட்டங்களுள் ஒன்றான, கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ் 1.5 கோடி குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. மகளிர் விடியல் பயண திட்டத்தில் இதுவரை 5.71 கோடிக்கும் மேலான பெண்கள் பயணித்துள்ளனர். முதல்வரின் காலை உணவுத்திட்டத்தில், 17.53 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் நிதியை மத்திய அரசு வழங்கும் என இந்த அரசு நம்புகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டால் 35,500 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். புதுமைப்பெண் திட்டத்தில் 4.25 லட்சம் மாணவிகள், தமிழ்ப்புதல்வன் திட்டத்தால் 3.52 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். நான் முதல்வன் திட்டத்தால் 2.58 கோடி இளைஞர்களுக்கு வேலை கிடைத்துள்ளது.
இந்தியாவின் மருத்துவத் தலைநகராக தமிழகம் திகழ்கிறது. இன்னுயிர் காப்போம்- நம்மை காக்கும் 48 திட்டத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமான மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த, அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத்திட்டம் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், தொல்குடி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்காக விழுதுகள் என்ற ஒருங்கிணைந்த சேவை மையங்களை அமைக்க தமிழக அரசு முனைத்துள்ளது. தமிழகத்தின் மரபுசார் கைவினைத்தொழில்கள் மற்றும் இதர சிறு தொழில்களை மேம்படுத்த கலைஞர் கைவினைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டித்தரும் வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் வறுமையை முற்றிலும் ஒழிக்க இறுதி முயற்சியாக முதல்வரின் தாயுமானவர் திட்டத்தை தமிழக அரசு தொடங்க உள்ளது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில், தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாறி வருகின்றன. சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க, தமிழ்நாடு சிறுதானியங்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு இடையிலான நதிநீரில் நியாயமான பங்கை பெற அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண மத்திய அரசை இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சட்டம்- ஒழுங்கை திறம்பட நிர்வகிக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது. போதைப்பொருட்களுக்கு எதிராக பாரபட்சமற்ற கடும் அணுகுமுறையை அரசு தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.
தமிழகத்தில் நிலவும் அமைதியான வளர்ச்சிக்கு உகந்த சூழலால் 2021-ம் ஆண்டுமுதல் இதுவரை ரூ.10 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட தனியார் முதலீட்டுத் திட்டங்கள் தமிழகத்துக்கு வந்துள்ளன. மாநிலத்தின் தொழில் வள்ரச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும் புதிய தொழிற்பூங்காக்களை நிறுவ தேவைப்படும் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கண்டறிந்து, இதுவரை 14 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது.
கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், ஆராய்ச்சி, மருத்துவம் போன்ற துறைகளில் கவனம் செலுத்தும் செயற்கை நுண்ணறிவு இயக்கத்தை அரசு தொடங்கியுள்ளது. தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டத்தின்கீழ் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.4,115 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. புத்தொழில் நிதி, புத்தாக்க திட்டத்தால், நாட்டிலேயே அதிக புத்தொழில் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உருவெடுத்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், திட்டமிட்டபடி பணிகளை முடிக்க வழிவகை ஏற்பட்டுள்ளது. மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளுக்கான நிரந்தர நிவாரணம், மறுசீரமைப்புக்காக ரூ.6,675 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்.
அரசு பொறுப்பேற்றது முதல் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக நிறைவேற்றியுள்ளது. குறுகிய காலத்தில் செய்த இநந்த சாதனைகள் குறித்தும், ஒருமித்த முன்னேற்றம் குறித்தும் இந்த அரசு பெருமிதம் கொள்கிறது. நாட்டின் பிற மாநிலங்கள் மட்டுமின்றி, தெற்காசியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக தமிழகத்தை உருவாக்க அரசு முயற்சி மேற்கொள்ளும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.