உரையை வாசிக்க ஆளுநருக்கு விருப்பமில்லை: சாக்கு போக்கு கூறுவதாக பேரவை தலைவர் அப்பாவு கருத்து


உரையை வாசிக்க விருப்பமின்றி ஆளுநர் சாக்குபோக்காக கூறுவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு கருத்து தெரிவித்துள்ளார். ஜன. 11-ம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதன்பின், செய்தியாளர்களிடம் மு.அப்பாவு கூறியதாவது: அலுவல் ஆய்வுக்குழு முடிவின்படி, மறைந்த உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு நாளை (இன்று) இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும். தொடர்ந்து 4 நாட்கள் (ஜன.11) கூட்டத் தொடர் நடைபெறும். நான்காம் நாள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்குவார். முதல் 3 நாட்கள் கேள்வி நேரம் இடம்பெறும்.

பேரவையில் ஆளுநர் பேசத் தொடங்கியபோது, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் நியாயம் வேண்டும் என்று அதிமுகவினர் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். ஆளுநர் உரைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், கலவர நோக்கத்துடன் செயல்பட்டதால் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர். அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுநர் உரையை படிக்க வேண்டும். அவர் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி இருக்க வேண்டும். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இதுபோல் ஆளுநர் செய்துள்ளார்.

ஆளுநருக்கு உரையை வாசிக்க மட்டுமே உரிமை. சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமே கருத்து சொல்ல முடியும். மற்றவர்களுக்கு அந்த உரிமை இல்லை. உரையை வாசிக்க விருப்பமின்றி, தேசிய கீதத்தை சாக்குபோக்காக ஆளுநர் கூறுகிறார் என தெரிகிறது. இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் இந்த பிரச்சினை இல்லை. தமிழகத்தில் வேண்டுமென்றே திட்டமிட்டு செயல்படுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x