சட்டப்பேரவையில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை : தமிழ்த் தாய் வாழ்த்துக்குப் பிறகு தேசிய கீதம் இசைக்குமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டார். ஆனால், திமுக அரசு அதை மறுத்திருக்கிறது. 1970-ல் அசல் தமிழ்த்தாய் வாழ்த்தைச் சுருக்கி, திருத்தப்பட்ட பாடலை மாநில அரசின் தமிழ்த்தாய் வாழ்த்து என முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
எனினும், 1991 வரை தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை. 1991 ஜூலை மாதம் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோதுதான், முதல்முறையாக ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், முடிவிலும் முறையே தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு தமிழக அரசை ஆளுநர் கேட்டுக்கொள்கிறார். இதை சர்ச்சையாக மாற்றுவது, அரசின் தோல்விகளை மடைமாற்றுவதற்காகத்தான். ஆளுநர் உரை தொடங்கும் முன்னரும், நிறைவு பெற்றதும் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் வாசிப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே பாஜக நிலைப்பாடு.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: பேரவையில் ஆளுநருக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்பதற்காகவே, தொடர்ந்து தேசிய கீதம் அவமதிக்கப்படுவது அரங்கேறி வருகிறது. மக்களின் நலனுக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுவதைவிடுத்து, இதுபோன்ற தேவையற்ற அரசியல் செய்து கொண்டிருக்கும் போலி திராவிட மாடல் அரசு, தேச விரோதமாக நடந்து கொள்வது ஏற்கத்தக்கதல்ல.
தேசிய கீதம் இசைக்க வேண்டுமென்று ஆளுநர் கோரிக்கை விடுத்தும், அதை பேரவைத் தலைவர் ஏற்க மறுத்தது கண்டனத்துக்குரியது. ஆளுநருடன் முரண்பட்டு, அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்படும் போக்கை முதல்வர் ஸ்டாலின் கைவிட வேண்டும்.
வானதி சீனிவாசன் கேள்வி: பேரவைக்கு வெளியே பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பேரவையில் ஆளுநர் உரையை தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. பின்னர் காங்கிரஸ், அதிமுக எம்எல்ஏ-க்கள் குறிப்பிட்ட விஷயத்துக்காக கோஷமிட்டனர். அப்போது, தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் கோரினார். அதை யாரும் கேட்காததால் உடனடியாக வெளியேறினார். தமிழக எம்எல்ஏக்களுக்கு தேசிய கீதம் பாடத் தெரியாதா? அதைப் பாடுவதில் என்ன பிரச்சினை? பேரவை மரபில் தேசிய கீதத்துக்கு இடமில்லையா? பேரவைத் தலைவர் எத்தனையோ மரபுகளை மீறிக்கொண்டிருக்கிறார்.
மாநில அரசு திட்டமிட்டு பிரிவினைவாதக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. தேசிய கீதத்துக்கு அவமரியாதை செய்ய வேண்டும் என்ற வகையில், பேரவைத் தலைவர் ஆளும் கட்சியுடன் சேர்ந்து இதுபோன்ற நாடகத்தை நடத்தியிருக்கிறார். இது ஜனநாயகத்துக்கு எதிரானது. இவ்வாறு அவர் கூறினார்.