சிவகங்கையுடன் காஞ்சிரங்கால், வாணியங்குடி ஊராட்சிகளை இணைக்க மக்கள் எதிர்ப்பு


சிவகங்கை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட காஞ்சிரங்கால், வாணியங்குடி கிராம மக்கள்.

சிவகங்கை: சிவகங்கை நகராட்சியுடன் காஞ்சிரங்கால், வாணியங்குடி ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சிவகங்கை நகராட்சியுடன் காஞ்சிரங்கால், வாணியங்குடி ஆகிய ஊராட்சிகள் உள்ளன. இந்நிலையில், காஞ்சிரங்கால் ஊராட்சியில் காஞ்சிரங்கால், அரசனேரிகீழமேடு, எம்ஜிஆர் நகர், அசிசி நகர், அரசினிப்பட்டி, இலந்தகுடிபட்டி, காமராஜர் நகர், சஞ்சய் நகர், டி.புதூர், தென்னலிவயல் ஆகிய பகுதிகளையும், வாணியங்குடி ஊராட்சியில் வாணியங்குடி, கீழவாணியங்குடி, மேலவாணியங்குடி, இந்திராநகர், அண்ணாமலை நகர், கூத்தாண்டன், ஆயுதப்படை குடியிருப்பு, குறிஞ்சி நகர், அண்ணா நகர், சீனிவாச நகர், சமத்துவபுரம், பழமலை நகர், பையூர், காட்டு குடியிருப்பு ஆகிய பகுதிகளையும் சிவகங்கை நகராட்சியுடன் இணைக்க அரசு உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரு ஊராட்சிகளையும் சேர்ந்த மக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும், அவர்கள் கூறுகையில், ‘நகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலைத் திட்டம் நிறுத்தப்பட்டு, எங்களது வாழ்வாதாரம் பாதிக்கும். சொத்துவரி, குடிநீர் கட்டணம் பல மடங்கு உயரும். இதனால் நகராட்சியுடன் இணைக்க கூடாது’ என்றனர்.

அவர்களை போலீஸார் சமரசம் செய்ததை அடுத்து, போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் மனு கொடுத்தனர்.

x