திண்டுக்கல் மாநகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்: மக்கள் வேதனை


அடியனூத்து ஊராட்சியை திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த கிராமமக்கள். படம்: நா.தங்கரத்தினம்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியுடன், அடியனூத்து, பள்ளபட்டி கிராம ஊராட்சிகளை இணைத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பொதுமக்கள் திண்டுக்கல் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திண்டுக்கல் மாநகராட்சியுடன் பாலகிருஷ்ணாபுரம், அடியனூத்து, தோட்டனூத்து, பள்ளபட்டி, குரும்பபட்டி, சீலப்பாடி, முள்ளிப்பாடி, செட்டிநாயக்கன்பட்டி ஆகிய எட்டு கிராம ஊராட்சிகளை இணைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதில் மாநகராட்சியுடன் அடியனூத்து, பள்ளபட்டி கிராம ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திரளானோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். இவர்கள் திண்டுக்கல் மாநகராட்சியுடன் தங்கள் பகுதியை இணைக்க கூடாது என சொல்லி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆட்சியர் பூங்கொடியிடம் மனு அளித்தனர்.

மனுவில் கூறியுள்ளதாவது: தங்களது ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால் தேசிய ஊரக வேலைத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைப்பது, கிராம ஊராட்சியில் செயல்படுத்தப்படும் கலைஞர் வீடு கட்டும் திட்டம், ஆடு, மாடு, கோழிகள் வழங்கும் திட்டம், கிராமத்திற்கு என ஒதுக்கப்படும் மத்திய, மாநில அரசு திட்டங்கள், கிராமசாலைகள் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் ரத்தாகும். வீட்டு வரி, குடிநீர் வரி ஆகியவை ஆண்டுக்கு இருமுறை மாநகராட்சிக்கு சென்று செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். மேலும், தற்போதுள்ள வரிகளும் அதிகரிக்கும். எனவே தங்களது கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க கூடாது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நல்லாம்பட்டியை சேர்ந்த பார்வதி கூறுகையில், 100 நாள் வேலையில் வரும் வருமானத்தை கொண்டுதான் வாழ்க்கை நடத்தி வருகிறேன். மாநகராட்சியுடன் எங்கள் கிராமத்தை இணைத்தால் வேலையிழப்பு ஏற்படும். இதனால் என்னைப் போன்றவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவிக்கிறோம், என்றார்.

x