ஆளுநர் ரவியை பதவியிலிருந்து நீக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு நாராயணசாமி வலியுறுத்தல்


புதுச்சேரி: ஆளுநர் ரவியை பதவியிலிருந்து குடியரசுத் தலைவர் உடனடியாக நீக்கி புதிய ஆளுநரை நியமிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி வெளிநடப்பு தொடர்பாக நாராயணசாமி இன்று கூறியதாவது: ”தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தொடர்ந்து சில ஆண்டுகளாக சட்டப்பேரவையில் உரையாற்ற வரும் போது பல காரணங்களை கூறி உரையாற்றாமல் சென்றுள்ளார். இன்றைய தினமும் அதே நிகழ்வு நடந்துள்ளது. தமிழக அரசின் கொள்கை திட்டங்களை அமைச்சரவை முடிவு செய்து ஆளுநருக்கு அனுப்பினால் அவர் ஏற்றுக்கொண்டு சட்டப்பேரவையில் படிக்க வேண்டும்.

கடந்த முறை அவர் அமைச்சரவை முடிவு செய்த உரையை மாற்றி படித்தார். அது மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது.
இந்த ஆண்டு மற்றொரு சர்ச்சையை அவர் ஏற்படுத்தியிருக்கிறார். ஆளுநர் உரை முடித்த பிறகு அதன் மொழியாக்கத்தை பேரவைத் தலைவர் படித்த பிறகு தேசிய கீதம் இசைக்கப்படும். இதுதான் அனைத்து சட்டப்பேரவையிலும் பின்பற்றப்படும் மரபு. ஆனால் தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கூச்சலிட்ட போது ஆளுநர் தனது உரை படிக்காமல் தேசிய கீதத்தை இசைக்க அவர் வற்புறுத்தி இருக்கிறார்.

இது நடைமுறை இல்லை. ஆனால் வேண்டுமென்றே தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் தமிழக மக்களுக்கும் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆளுநர் ரவி ஏற்கனவே வெளிநடப்பு செய்ய முடிவு செய்துவிட்டு வந்துள்ளார். தேசிய கீதம் பாடப்படவில்லை என்ற ஒரு சாக்கு கூறி வெளியேறியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது. அமைச்சரவை எடுத்த முடிவை படிக்க வேண்டுமே தவிர அதில் சேர்ப்பதோ குறைக்கவும் அவருக்கு அதிகாரம் கிடையாது.

திட்டமிட்டே அவர் வெளிநடப்பு செய்து ஜனநாயகத்திற்கு அவர் செய்த மிகப்பெரிய படுகொலையாகும். தமிழக அரசுக்கு ஆளுநர் தொல்லை கொடுத்து வருகிறார். தமிழக சட்டமன்றத்திலும் தமிழக முதல்வரையும் தமிழக மக்களையும் ஆளுநர் அவமதித் துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை கொடுக்க தவறிவிட்டார். இதனால் குடியரசுத் தலைவர் உடனடியாக ரவியை ஆளுநர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். புதிய ஆளுநரை நியமிக்க வேண்டும்” என்று நாராயணசாமி கூறினார்.

x