சட்டப்பேரவையை அவமதித்த ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கர் அதிரடி


சென்னை: சட்டப்பேரவையை அவமதித்ததற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “பாரம்பரியமாக தமிழக சட்டப்பேரவையில் என்னென்ன நிகழ்வுகள் நடந்து வருகிறதோ, அதே நிகழ்வுகள் தான் தற்போதும் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதை மாற்ற வேண்டும் என்கிற முயற்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி இறங்குகிறார். அது நடக்காது என்ற காரணத்தினாலும், ஆளுநர் உரையை வாசித்தால் திமுகவின் சாதனைகளை வரிசையாக அடுக்க வேண்டும் என்கிற காரணத்தாலும், அதை மக்களிடம் கொண்டு சேர்க்க கூடாது என்ற காரணத்தாலும் தான் அவர் இன்றைக்கு இ்வ்வாறு நடந்து கொண்டார்.

ஆளுநர் உரை திமுக ஆட்சியின் சாதனைகளை விவரிக்கும் விதமாக இருக்கிறது. அதை படிப்பதற்கு தயங்கி கொண்டுதான் இந்த நாடகத்தை ஆளுநர் நடத்தியிருக்கிறார். கடந்த முறை தமிழகத்தின் தலைவர்கள் பெயரை சொல்லாமல் மறைத்தவர், இன்றைக்கு ஒட்டுமொத்தமாக ஆளுநர் உரையை புறக்கணித்து இருக்கிறார். ஆனா அவரோ தேசிய கீதம் பாடப்படவில்லை என்று காரணம் சொல்லியிருக்கிறார். ஏதோ தேச பக்தியை ஒட்டுமொத்த குத்தகையை அவர் தான் எடுத்திருக்கிறார் என்பது போல பேசுகிறார். தேச பக்தியில் தமிழக மக்களை மிஞ்சி அவர் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது. சுதந்திர போராட்டத்தில் தமிழகத்திலிருந்து ஏராளமான தலைவர்கள் தன்னுயிரை தியாகம் செய்திருக்கின்றனர். ஆனால் இவருக்கு மட்டும் தான் தேச பக்தி பீறிட்டு வந்தது போல தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்று சொல்கிறார்.

இதுவரை எத்தனையோ ஆளுநர்கள், முதல்வர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் இந்த எண்ணம் கிடையாதா? முன்பு அதிமுக ஆட்சியிலும் தமிழ்த் தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்பட்டது. இன்றும் அப்படித்தான். அதைத்தொடர்ந்து சட்டப்பேரவை தலைவர் ஆளுநர் உரையை வாசித்து முடித்த பின் தேசிய கீதம் பாடப்பட்டது. முதல்வர் உள்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தி இருக்கிறோம். எனவே இதுபோன்ற ஒரு நாடகத்தை நடத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி வருத்தம் தெரிவிக்க வேண்டும். அவையை அவமதித்ததை முன்னிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

x