புதுச்சேரி - பெங்களூர் பகல் நேர பேருந்துக்கான கட்டணத்தை குறைத்தது பிஆர்டிசி!


புதுச்சேரி: புதுச்சேரி- பெங்களூர், பெங்களூர் புதுச்சேரி பகல் நேர பேருந்து கட்டணத்தை பிஆர்டிசி குறைத்துள்ளது. அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துக்கும் சாதாரண பேருந்துக்கான கட்டணமே வசூலிக்கப்படுவது நடைமுறைக்கு வந்துள்ளது. அதே நேரத்தில் இரவு நேர பேருந்து கட்டணத்தில் மாற்றமில்லை.

புதுச்சேரியில் இருந்து பெங்களூக்கு காலை 10.15 மணிக்கும், பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு பகல் 12.30-க்கும் பகல் நேரங்களில் இயக்கப்படும் அல்ட்ரா டீலக்ஸ் பிஆர்டிசி பேருந்துகளின் கட்டணம் இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது பழைய கட்டணமாக ரூ.485 வசூலிக்கப்பட்டது. இனி ரூ.390 வசூலிக்கப்படும். பகல் நேரத்தில் அதிகளவு பயணிகள் செல்ல வசதியாக அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளிலும் சாதாரண பேருந்துகளுக்கான கட்டணம் வசூலிக்க பிஆர்டிசி முடிவு செய்து நடைமுறைக்கு வந்துள்ளது.

அதே நேரத்தில் இரு வழித் தடங்களிலும் இரவு நேரத்தில் செல்லும் பேருந்துகளுக்கு பழைய கட்டணமே (ரூ.485) வசூலிக்கப்படும். இரவில் பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு இரவு 9.30 மணிக்கும், புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு இரவு 11 மணிக்கும் பேருந்துகள் புறப்படும் என்று பிஆர்டிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

x