சென்னை: திருவள்ளுவர், அண்ணா, பெரியார் விருது பெற்றவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்மொழி வளர்ச்சிக்கும், வளமைக்கும், செழுமைக்கும் வழிவழியாக பலர் பங்களிப்பு செய்து வருகின்றனர். இதில் பெருமை மிகு பங்களிப்பு செய்துவரும் அனைவரையும் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பாராட்டி விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
அந்தவகையில், அய்யன் திருவள்ளுவர், அறிஞர் அண்ணா, மகாகவி பாரதி, பாவேந்தர் பாரதிதாசன், தமிழ்த்தென்றல் திரு.வி.க. மொழிக்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் பெயர்களில் உருவாக்கிய விருதுகளுக்கு முறையே புலவர் மு.படிக்கராமு, எல்.கணேசன், கவிஞர் கபிலன், கவிதைப் பேரொளி பொன்.செல்வகணபதி, டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், வே.மு.பொதியவெற்பன், விடுதலை ராஜேந்திரன், து.ரவிக்குமார், முத்து வாவாசி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விருது பெரும் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. இந்த பட்டியலில் திரு.வி.க. விருதுக்கு டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தேர்வு செய்யப்பட்டதை அறிந்து, “ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் - தன் மகனை சான்றோன் என கேட்ட தாயாக” இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பெருமை பொங்க வாழ்த்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.