சென்னை: 2026-ல் திமுக கூட்டணி நிச்சயம் உடையும் என தமிழிசை தெரிவித்தார். பொங்கல் விழாவை முன்னிட்டு பாஜக சார்பில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பெருங்குடியில் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:
தமிழர் திருநாளை கொண்டாடும் முழு தகுதி பாஜகவுக்கு இருக்கிறது. பாஜக தமிழகத்தை கவனிக்க மாட்டார்கள், பாஜகவுக்கு தமிழ் பிடிக்காது என்ற பொய் பிரச்சாரத்தை திமுகவும், திமுக கூட்டணி கட்சிகளும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றன. ஆனால், இதுவரை இருந்த பிரதமர்களைவிட, தமிழை உலகுக்கு அதிகமாக எடுத்து சென்றது மோடிதான்.
இனி, பாஜக தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதிரானவர்கள் என பிரச்சாரம் செய்தால், நாங்கள் அதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என இந்த பொங்கல் திருநாளில் சபதம் ஏற்கிறோம்.
பொங்கல் தொகுப்பில் தமிழக அரசு பணம் வழங்கவில்லை. இப்போதே பணம் கொடுத்தால் மக்கள் மறந்துவிடுவார்கள் என தேர்தல் வரும்போது பணம் கொடுக்கலாம் என திமுக அரசு நினைக்கிறது. எனவே, பொங்கல் தொகுப்போடு மக்களுக்கு உடனடியாக பணமும் பரிசாக வழங்க வேண்டும். கல்லூரி வளாகத்துக்குள் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். தாய்மார்கள் அனைவரும் அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரிக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் தமிழிசை கூறும்போது, ‘2026 தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, மற்ற மாநிலங்களைபோல, தமிழகத்திலும் பெண்கள் லட்சாதிபதியாகும் திட்டத்தை கொண்டு வருவோம். முரசொலி எதிர்க்கட்சிகளை தான் மிரட்டி கொண்டிருந்தது. தற்போது கூட்டணி கட்சிகளையும் மிரட்ட ஆரம்பித்துவிட்டது. கருத்து சுதந்திரத்தில் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் குரல் வலையும் நெரிக்கப்படுகிறது. திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளே, திமுக மீது அதிருப்தியில் இருக்கின்றனர். 2026-ல் திமுக கூட்டணி நிச்சயம் உடைந்து போகும்.
ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் கருப்பு நிற துப்பட்டா அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கருப்பு நிற துப்பட்டாவை, கருப்பு கொடி என முதல்வர் நினைத்துவிட்டார். கருப்பை பார்த்து ஸ்டாலினும் அச்சப்பட தொடங்கிவிட்டார். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் உண்மையான விசாரணை நடைபெறுகிறது என்பதை மக்களுக்கு டிஜிபி தெளிவுப்படுத்த வேண்டும்’ என்றார்.